வெடித்தது சர்ச்சை.. காஞ்சிபுரத்தில் இரண்டு நாட்கள் பிரியாணி கடைகள் மூடும் உத்தரவு வாபஸ்..!
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பிரியாணி மற்றும் இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பித்திருந்தது தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பிரியாணி மற்றும் இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பித்திருந்தது தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கோவில் நகரமாக கருதப்படும் காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 2ம் தேதியும் 4ம் தேதிகளில் செங்கழுநீரோடை வீதி மற்றும் சங்கர மடம் அருகே உள்ள கடைகள் மற்றும் பிரியாணி கடைகளை மேற்கண்ட தினங்களில் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டி மேற்கண்ட இரு தினங்களுக்கு மூடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் காவல்துறை சார்பாக சிவகாஞ்சி காவல் நிலைய வரம்புக்கு உள்பட்ட வியாபாரிகளுக்கு ஆணை நகல் வழங்கப்பட்டது.
இந்த ஆணை நகல் சுற்றறிக்கையாக உள்ளூர் வியாபாரிகளை வரவழைத்து அளிக்கப்பட்டது. அதை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில், மேலிட அனுமதியின்றி இந்த ஆணையை பிறப்பித்து அதை சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் தன்னிச்சையாக வழங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் தற்போது கடைகளை மூடும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.