அவங்க ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்கவே முடியாது.. அடித்து கூறும் திமுக கூட்டணி கட்சி..!
கள்ளச்சாராய விற்பனையை காவல்துறை தடுக்கத் தவறியதன் காரணமாகவே, 17க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் மதுவிலக்கு நடைமுறை என்ற தனிப்பிரிவு காவல்துறையில் செயல்பட்டு வரும் நிலையில், அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்கவே முடியாது.
தமிழ்நாட்டில் கஞ்சா, குட்காவைத் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரித்திருப்பது, இந்த இரு பெரும் நிகழ்வுகள் வாயிலாக அம்பலப்பட்டுள்ளது என வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5ஆக உயர்ந்துள்ளது. இந்த இரு நிகழ்வுகள், பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் கஞ்சா, குட்காவைத் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரித்திருப்பது, இந்த இரு பெரும் நிகழ்வுகள் வாயிலாக அம்பலப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனையை காவல்துறை தடுக்கத் தவறியதன் காரணமாகவே, 17க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் மதுவிலக்கு நடைமுறை என்ற தனிப்பிரிவு காவல்துறையில் செயல்பட்டு வரும் நிலையில், அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்கவே முடியாது.
கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் துரைபாண்டியன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தமிழ்நாடு முதல்வர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்கதக்கது. ஆனால், கள்ளச்சாராயத்தை நுகர்வோர்களில் பெரும்பாலும் விளிம்பு நிலை உழைக்கும் சமூக மக்களாகத்தான் இருப்பர். காவல் துறை கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துமா அல்லது கள்ளச்சாராய வியாபரிகளுக்கு துணைபோகுமா என்கிற கேள்விகள் ஏராளம்.
தமிழ்நாடு அரசே நடத்தும் மதுக்கடைகளால் நடுத்தர வர்க்கத்தில் புதிய மது நுகர்வோர்கள் உருவாகிறார்கள் என்பதில் எவ்வளவு உண்மையோ, அதே அளவில் கள்ளச்சாராயத்தால் விளிம்புநிலை சமூகங்கள் முற்றிலும் அழிந்து போவார்கள் என்பதும் உண்மையே. கள்ளச்சாராயத்தால் கண் பார்வையிழப்பு, உயிரிழப்பு போன்ற கொடிதிலும் கொடிதான சம்பவங்கள் நடைபெறும் என்பது, தற்போது நம் கண்முன்னே அரங்கேறியுள்ளது. எனவே, எதிர்காலத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும். புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் கள்ளச்சாராயம் கொண்டு வரப்படுவதாக கூறப்படும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கள்ளச்சாராய விற்பனையை முற்று முழுதாக ஒழிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கண்காணிப்பு படையை அமைக்க வேண்டும். கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். இவை தவிர, மது விலக்கு கொண்டு வருவதற்கு முன் மது மறுவாழ்வு மய்யங்களை அதிக அளவில் தொடங்க வேண்டும்.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மதுபான ஆலை உரிமையாளர்களின் சந்தையை கட்டுப்படுத்த வேண்டும். கார்ப்பரேட் கூட்டிணைவுக் குழுமங்களில் அனுமதிக்கப்படும் மது கலாச்சாரத்தை தடை செய்யவேண்டும். இது போன்ற செயல்திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி விட்டு, படிப்படியாக முழுமையான மது விலக்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என வேல்முருகன் கூறியுள்ளார்.