Asianet News TamilAsianet News Tamil

எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும்; அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும்... ஸ்டாலின் சொன்ன ஹேப்பி பொங்கல்!!

தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும்; அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும்! தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Stalin Wishes Happy Pongal to Tamilnadu people
Author
Chennai, First Published Jan 15, 2019, 9:08 AM IST

அதில், ‘தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்துக்கு, தமிழன் பண்புக்கு, தமிழர் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்துக்கு ஏற்றவாறு ஒரு விழா, தமிழர் விழா ஒன்று உண்டென்றால் அது பொங்கல் விழா தான்’ என்றார் தந்தை பெரியார். ‘அன்று தொட்டு இன்றளவும் நம்மை அகமகிழச் செய்துவரும் பொன்னான விழாவாகப் பொங்கல் அமைந்துள்ளது’ என்றார் பேரறிஞர் அண்ணா.

‘பண்படுத்திப் பரம்பிடித்து, எருவிட்டு ஏர் பிடித்து, விதை தூவி, நாற்று நட்டு, களையெடுத்து, கதிர் முற்றிடக் கண்டு அறுத்தெடுத்துப் புடைத்துக் குவித்து உணவுப் பொருளை உலகோர்க்கு உழவரளிக்கும் தைப் பொங்கல் தான் நாம் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் கொண்டாடும் விழா’ என்றார் கருணாநிதி.

தமிழ்ச் சமுதாயத்தின் முப்பெரும் தலைவர்கள் போற்றிய திருநாள் தான் தை முதல் நாள் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் திருநாள். எத்தனையோ விழாக்கள் உண்டு. அவை மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம், ஊருக்கு ஊர் மாறுபடும், வேறுபடும். ஆனால், ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் இருக்கும் ஒரே விழா இதுதான். உயர்வு தாழ்வற்ற சமத்துவ விழா.

இலக்கியத்துக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும், மண்ணுக்கும் இலக்கணம் வகுத்தவன் தமிழன். மண்ணும், மக்களுமானது தான் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை. உழவே நமது உயிர். மாடுகள் நமது செல்வங்கள். அதனால் தான் மண்ணைக் காப்பதற்கு நாம் போராடுகிறோம். ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறோம். கீழடியைக் காப்பாற்றப் போராடுகிறோம். மேகதாதுவை தடுக்கப் போராடுகிறோம். இந்த போராட்டங்களில் அரசியல் இல்லை, நம் வாழ்க்கை இருக்கிறது. தமிழர்களின் எதிர்காலம் இருக்கிறது. அதனால் தான் வாழ்க்கையையும், அதனோடு தொடர்புடைய விழாவையும் ஒருசேர வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்றார் வள்ளுவர். அத்தகைய உழவர் வாழ்க்கை இன்று உற்சாகமாக இல்லை. அனைத்துத் தரப்பு மக்களின் துன்ப துயரங்கள், கவலைகள் சொல்லி மாளாது. இதற்கு காரணமான அரசுகள் அதுபற்றிய கவலைகள் இல்லாமல் இருப்பதும் உண்மைதான். இவர்களை வாழ்த்தும் ஜனநாயகப் போர்க்களம் நம்மை விரைந்து அழைக்கிறது. அதற்கு முன்னதாக உற்சாகத்தை வழங்கும் விழாவாக பொங்கல் திருநாள் வருகிறது.

‘அகிலும் தேக்கும் அழியாக் குன்றும் அழகாய் முத்துக் குவியும் கடல்கள், முகிலும் செந்நெல்லும் முழங்கு நன்செய் முல்லைக்காடு மணக்கும் நாடு’ என்று பாரதிதாசனால் பாராட்டிப் போற்றப்பட்ட தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பொங்கல் திருவிழாவுடன் - தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கொண்டாடிட, 1921-ம் ஆண்டு தமிழ் புலவர்கள் கூடி முடிவெடுத்ததை 2006-2011 ஆட்சி காலத்தில் செயல்படுத்தியவர் கருணாநிதி. அதன்படி, தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். எதிர்கால நிலத்தில், நல்லாட்சி விளையட்டும், அதற்கான விவசாயம், இந்நாளில் தொடங்கட்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios