Asianet News TamilAsianet News Tamil

மார்கழியின் சிறப்பு : திருப்பாவை - திருவெம்பாவை (பாடல் 2)

margazi vazhipadu day 2 songs and explanations
margazi vazhipadu day 2 songs and explanations
Author
First Published Dec 16, 2017, 5:49 PM IST


மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கோயில்களுக்குச் சென்று, திருப்பாவை திருவெம்பாவை பாடல்களைப் பாடி, இறை வழிபாட்டை மேற்கொள்வது நம் மரபு. அதற்கு உதவியாக மார்கழி மாத 2ம் நாளான நாளைக்கு உதவியாக இதோ 2 வது பாடல்கள்...

திருப்பாவை - பாசுரம் 2
--------------
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
 
பாசுரத்தின் விளக்கம்:
மார்கழித் திங்கள் எனத் தொடங்கும் திருப்பாவை முதல் பாட்டில், நோன்பு யாரை முன்னிட்டு நோற்பது என்று கூறி தோழியரைத் துயில் எழுப்பி அழைத்த ஆண்டாள், இந்தப் பாட்டில் நோன்பு நோற்பவர் செய்யக் கூடியவற்றையும் விலக்க வேண்டியவற்றையும் கூறுகிறாள். 

இந்த வையத்தில் வாழும் பேறு பெற்றவர்களே! வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி வாழ, வாழ்வில் கடைத்தேற வேண்டிய வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் கள்ளத் துயில் கொண்டு கண்வளரும் பரமனின் திருவடியைப் போற்றிப் பாடி, நம் ஆசார்யர்களாகிற பெரியோர்களுக்கு இடுகின்றதான ஐயத்தையும், துன்பத்தே உழல்வார்க்கு இடும் பிட்சையையும் நம் சக்தி உள்ளளவும் இட்டு மகிழ்வோம். இப்போது, நமது நோன்புக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கூறுகிறேன்...  காது கொடுத்துக் கேளுங்கள். 

நோன்பு நோற்கத் தொடங்கிய பிறகு நாம் உடலுக்கு ஊட்டமும் உரமும் தரும் நெய் உண்ணக்கூடாது. பாலை உண்ணக் கூடாது. 

விடியற் காலத்தே உடற்தூய்மை பேண நன்னீரால் குளித்துவரவேண்டும். பின்னர் வழக்கமாக நாம் மேற்கொள்ளும் கண்ணுக்கு மையிட்டு அலங்காரம் செய்தல், கருங்கூந்தலிலே மலர் சூடி அழகு சேர்த்தல் ஆகியவற்றை நோன்புக் காலத்தே விலக்குவோம். 

இவ்வாறு நம் முன்னோர்கள் எதைச் செய்யக்கூடாது என்று வைத்தார்களோ அவற்றை செய்யாதிருப்போம். பெருமான் பக்கலில் நின்று, கொடுமையும் தீமையும் விளைவிக்கும் சொற்களைக் கூறாதிருப்போம் என்று நோன்புக் காலத்தின் கிரியைகளை தோழியர்க்குக் கூறுகிறாள் ஆண்டாள்!

***
திருவெம்பாவை ... பாடல் 2
***
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் 
பேசும்போது எப்போதும் இப்போதார் அமளிக்கே 
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் 
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி 
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் 
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் 
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 

பாடலின் விளக்கம்:
துயிலெழுப்ப வந்த தோழியர் கேட்பது போல் அமைந்த பாடல்...
இரவு பகலெல்லாம்... நாம் பேசும் பொழுதெல்லாம்,
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய். 
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை உண்மையில் வைத்தாயோ ?
- என்று கேட்கிறாள் தோழி. அதற்கு படுக்கையில் படுத்திருக்கும் பெண், சீ சீ ! இப்படியா பேசுவது ? என்று கூறுகிறாள்.
அதற்கு தோழியர்,   இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ? என்று ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். 
அதற்கு அவர்கள், சிவ பெருமானின்  பெருமையைக் கூறியும், தங்களது கீழ்மையைச் சொல்லி நாணத்தினால் தலை கவிழ்ந்தும்.. இவ்வாறு கூறுகின்றனர்.. 
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான, தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !  என்று கேட்கின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios