வெறுப்புணர்வை தூண்டும் பிரதமர் மோடி மீது எப்.ஐ.ஆர்.: மனு தள்ளுபடி - டெல்லி உயர் நீதிமன்றம்!
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருவதாக பிரதமர் மோடி மீது எப்.ஐ.ஆர். பதிவிட கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த பிரசாரத்தின்போது, அவர் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அந்த வகையில், தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய உத்திரவிட கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது, மாதிரி நடத்தை விதிகள் மீறப்பட்டிருப்பதாக யார் முடிவு செய்வது என கேள்வி எழுப்பிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா, தேர்தல் ஆணையம் ஒரு அரசியலமைப்பு அமைப்பு என்பதால் அதன் செயல்பாட்டை மைக்ரோமேனேஜ் செய்ய முடியாது என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடும் நபரைப் பொறுத்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மாறுபடக்கூடாது. நடவடிக்கைகள் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுருசி சூரி, பிரதமரின் பேச்சுக்கு எதிராக புகார்கள் வந்ததையடுத்து ஆளும் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். மே 15ஆம் தேதிக்குள் பாஜக தரப்பிலிருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருவதாக பிரதமர் மோடி மீது எப்.ஐ.ஆர். பதிவிட கோரிய மனுவானது டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வரிசையில் வர சொன்ன வாக்காளருக்கு பளார் விட்ட எம்.எல்.ஏ. வேட்பாளர்!
முன்னதாக, “காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். நமது வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளது என காங்கிரஸ் கூறி வருகிறது. அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும். இந்து பெண்களின் தாலியை காங்கிரஸ் கட்சி அபகரித்து விடும்.” என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி மதம் மற்றும் கடவுள் வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றின் பெயரால் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பதாக கூறி அவரை ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரிய மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது கவனிக்கத்தக்கது.