Asianet News TamilAsianet News Tamil

டிகிரி படித்தவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. அறிவித்த சூப்பர் வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

இந்துசமய அறநிலையத் துறையில் உதவி ஆணையர் பணிக்கு 21 பேரும், பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு 8 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான குரூப் 1பி, குரூப் 1சி தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

TNPSC Recruitment 2024: Apply for Assistant Commissioner, District Educational Officer Vacancies sgb
Author
First Published Apr 24, 2024, 6:59 PM IST

இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர், பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய பதவிகள் அடங்கிய குரூப் 1பி, குரூப் 1சி தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்தம் 29 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 22.05.2024 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

உதவி ஆணையர்:

உதவி ஆணையர் பணிக்கு 21 காலியிடங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை சட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டு சட்டப்படிப்பு படித்து, 3 ஆண்டு வழக்கறிஞராக பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 01.07.2024 அன்று 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 39 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை – 22 பணியாளர்களுக்கான சம்பளம் வழங்கப்படும்.

மாவட்ட கல்வி அலுவலர்:

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு 8 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

01.07.2024 அன்று 42 வயதிற்குள் இருப்பவர்கள்தான் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC, BCM பிரிவினராக இருந்தால் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. இந்த வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டால் நிலை – 23 பணியாளர்களுக்கான சம்பளம் கொடுக்கப்படும்.

தேர்வு முறை:

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு விடுக்கப்படும்.

கட்டணம்:

டி.என்.பி.எஸ்.சி. தளத்தில் நிரந்தர பதிவு செய்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இல்லாவிட்டால், ரூ.150 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணமாக முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.100, முதன்மைத் தேர்வுக்கு ரூ. 200 செலுத்த வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM பிரிவினரும் கணவரை இழந்த பெண்களும் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரபூர்வ இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2024

இந்த வேலைவாய்ப்பு குறித்து விவரிவான தகவல்களை தெரிந்துகொள்ள விரும்பினால், https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios