"ஒரு சில லெவல்தான் இருக்கு... ப்ளீஸ் கேம் முடிக்கணும்"! மயக்க நிலையிலும் வீடியோ கேம் விளையாடத் துடித்த இளைஞர்!
இளைஞர் ஒருவர் தொடர்ந்து 20 மணி நேரம் வீடியோ கேம் விளையாடியதால், கோமா நிலைக்குப்போன சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் வீடியோ கேம் பிரியர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் இந்த சம்பவம் உள்ளது.
சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள பிரவுசிங் சென்டர் ஒன்றில் கடந்த மாதம் 27 ஆம் தேதி காலை, இளைஞர் ஒருவர் மையத்துக்கு வந்துள்ளார்.
பின்னர், அவர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வீடியோ கேம் விளையாடத் தொடங்கினார். சிறிது நேரத்தில் மிக மிக மும்முரமாக விளையாட்டில் மூழ்கிவிட்டார். மறுநாள் மதியம் வரை அதாவது 28 ஆம் தேதி மதியம் வரை விளையாடிக் கொண்டே இருந்துள்ளாராம். உணவு, நீர் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மறுநாள் மதியம் வரை அவர் வீடியோ கேம் விளையாடி உள்ளார்.
வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் கழிப்பறைக்கு செல்ல சீட்டில் இருந்து எழ முற்பட்டுள்ளார். ஆனால் அவரால் தனது இரண்டு கால்களையும் நகர்த்த முடியவில்லை. அவரின் இடுப்பு முதல் பாதம் வரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் மரத்துப்போனதை அந்த இளைஞர் உணர்ந்துள்ளார்.
அப்போது அவர் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். கால்கள் செயலிழந்த நிலையில் பயத்தில் அவர் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த மருத்துவ குழுவினர், அந்த இளைஞரை ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஸ்ட்ரெச்சரில் மயக்க நிலையில் இருந்த அந்த இளைஞர், நான் அந்த கேமை முடிக்க வேண்டும்... இன்னும் ஒரு சில கட்டம்தான் உள்ளது... ப்ளீஸ் என்னை விடுங்க... என்று மயக்க நிலையிலும் கூறிக் கொண்டே இருந்ததாக இளைஞரின் நண்பர்கள் கூறினர். அந்த இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த இளைஞர் வீடியோ விளையாட்டின்போது போதை பொருள் ஏதேனும் உட்கொண்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் நடப்பது ஒன்றும் சீனாவில் புதிதல்ல. கடந்த ஆண்டு, செல்போனில் வீடியோ கேம் விளையாடிய 21 வயது பெண் ஒருவர், பார்வையை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சம்பவம் வீடியோ கேம் பிரியர்களுக்கு பயத்தை உண்டாக்கினாலும், வீடியோ கேம் விளையாட்டை அவர்கள் தொடர்ந்து வருவது பெரும் வேதனை அளிப்பதாக உள்ளது.