“ஒரு தலைமுறையை அழித்த கொடூர யுத்தம்” உதவிக்கு ஏங்கும் பிஞ்சுகள்! கலங்க வைக்கும் கோர சம்பவ பின்னணி...
கல்யாண வீடு கோவில் திருவிழாக்களில் வெடிக்கப்படும் வெடி சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடி வந்து கட்டி கொள்ளும் என் வீட்டுக் குழந்தையை எண்ணி மகிழ்வுற்ற மனம் இப்போது பிஞ்சுக் குழந்தைகளின் இந்த அலற சத்தம் கேட்காமல் உலக நாடுகள் காதைப் பொத்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது. சத்தம் அதிகமானதும் சேனலை மாற்றிவிட்டு மது போதையால் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி எப்போது இந்தவிர்க்கு கொண்டுவருவார்கள் என்ற செய்திய அறிய ஆவலாக இருக்கிறார்கள்.
உலக வரலாற்றில் இப்படி பச்சிளம் பிஞ்சுகளை கொன்றுக் குவித்த யுத்தமென்றால் அது சிரியா போராகத்தான் இருக்கும். அப்படி ஒரு அழியாச் சுவடுகளை தன்னுள் தாங்கிக்கொண்டு நிற்கிறது. மனித குலம் பார்த்திராதக் கொடூரங்களை அரங்கேற்றி வருகிறது.
உலகின் அழகிய நகரங்களைக் கொண்ட சிரியா, கொத்துக் கொத்தாக கொல்லப்படும் உயிர்களால் நரகமாக மாறி வருகிறது. நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய ஒரு அரசே தனது நாட்டின் பொது மக்களை பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது.
என்னதான் நடக்கிறது சிரியாவில்? இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் இப்படி ஒரு கொடூர யுத்தம் நடக்கிறது? இவையெல்லாம் நமக்கு தெரிய வேண்டுமென்றால் அதன் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்.
மத்தியக் கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த பல ஆட்சியாளர்களுக்கு எதிராக 2010-ஆம் ஆண்டு மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் தொடங்கிய இந்தப் புரட்சி, எகிப்துக்கும் பரவியது. இரு நாடுகளிலும் உடனடியாகவே ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டார்கள். ஆனால் லிபியாவில் சர்வாதிகாரியாக இருந்த கடாஃபி, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் படு பயங்கரமாக கொல்லப்பட்டார். இதனையடுத்து அரபு எழுச்சி பல்வேறு நாடுகளுக்கும் தீயாக பரவியது.
அதில் முதலில் வெடித்தது தான் இந்த சிரியா. அங்கு பதவியில் இருந்த பஷார் அல் அசாத்திற்கு எதிராக புரட்சி வெடித்தது. மக்களுக்கு எதிரான அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு இன்னொரு காரணம் மதப் பிரிவினை. சிரியாவைப் பொறுத்தவரை அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்றாலும் அவர்களுக்கு இடையே ஷியா, அலாவி, சன்னி உள்ளிட்ட பிரிவுகள் இருந்தன. ஆனால், பெரும்பான்மை சன்னிக்களை புறக்கணித்துவிட்டு, சிறுபான்மையினரான அலாவிகளை வைத்துக் கொண்டே ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தற்போதைய அதிபர் ஆசாத்தும் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்தான். வேலைவாய்ப்புகளில் அலாவி பிரிவினருக்கே ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுத் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில்பெரும்பான்மை சன்னி பிரிவினர் தொடங்கிய புரட்சி, பின்னர் ஆயுதக் புரட்சியாக விஸ்வரூபம் எடுத்தது.
லிபியாவில் கடாஃபிக்கு ஏற்பட்ட நிலையை உணர்ந்த சீனாவும் ரஷ்யாவும் தங்களது வர்த்தகக் கூட்டாளியான பஷார் அல் ஆசாத்தை ஆதரிக்க தொடங்கினர். இந்த சமயத்தில் ஈராக்கில் இருந்து வந்த ஐ.எஸ். அமைப்பு, தனி நாடு கோரும் குர்துக்கள், ஆசாத்தைப் பிடிக்காத சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, துருக்கி, ஈரான் என பல தரப்பும் சிரியாவுக்குள் சட்டத்திற்கு புறம்பாக நுழைந்தன. நான்கு முனை தாக்குதலாக நடக்கும் யுத்தத்தில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா, ஹிஸ்புல்லா இயக்கம், ஈரான் போன்றவை களம் இறங்கின. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி சண்டையிடுகிறது. அமெரிக்காவோ, குர்துக்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் நிற்கிறது. இவர்கள் அனைவரையும் ஒழித்துவிடத் துடிக்கிறது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம்.
கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா யுத்தம், 2016-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்ட சமயத்தில் பழம்பெரும் நகரமான அலெப்போ 2016-ஆம் ஆண்டு மிகப்பெரிய போர்க்களமாக மாறியது. 2012-ஆம் ஆண்டில் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இந்த நகரைக் கைப்பற்றியபோது, சுமார் 21 லட்சம் பேர் இந்த நகரில் வாழ்ந்தார்கள். நான்கு ஆண்டுகளில் இந்த நகரம் சின்னா பின்னமானது. 2016-ஆம் ஆண்டில் இந்த நகரின் மக்கள்தொகை வெறும் மூன்று லட்சமாகக் குறைந்தது. ரஷ்யப் படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரை விட்டு விரட்டப்பட்டனர். இரு முக்கியப் பகுதிகளை சிரிய ராணுவம் கைப்பற்றியது. ஜூலை மாதத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், கிழக்கு அலெப்போ நகரில் சிக்கியிருந்த அப்பாவிப் பொதுமக்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் கொண்டு செல்லப் பயன்பட்ட சாலையை சிரிய ராணுவம் அடைத்தது. இதைத் தொடர்ந்து தாக்குதல் தீவிரமடைந்தது. ரஷ்ய விமானங்களும், சிரியாவின் ராணுவமும் வீசிய குண்டுகள் வீசி சண்டையிட்டதில் கொத்துக் கொத்தாக பலியானது என்னவோ அப்படி பொதுமக்கள் தான்.
இந்தப் போருக்குப் பின் தீவிரவாத அமைப்பாளர்கள் தரப்பிலும் பொதுமக்கள் வதைக்கப்பட்டனர். சித்திரவதை செய்வதற்கும் தனிமையில் அடைத்து வைப்பதற்கும் பல சிறைகளை கிளர்ச்சியாளர்கள் அமைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் அந்நகரில் வசித்து பந்த ஒரு கூட்டமே கொத்தாக பலியானது. படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் 5 வயது சிறுவன் ஒம்ரான் படுகாயமடைந்து முகத்தில் ரத்தக் காயங்களுடன் ஆம்புலன்ஸில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கி எடுத்தது.
இதனிடையே சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்புதல் காரணமாக, சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களும், உணவுப் பொருட்களும் எளிமையாக சென்றடைய வழிவகுக்கும். ஆனால் போர் நிறுத்தத் தீர்மானம் ஐ.நாவில் நிறைவேறிய நிலையில் அதன்பின்பும் கிழக்கு ‘கூட்டா’வில் ரஷிய ஆதரவுப் படையுடன் சிரியா ஆதரவுப் படைகள் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இப்போது போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தபோதிலும், அது எந்த அளவிற்கு பலன் கொடுக்கும் என்பது கேள்வியாகவே உள்ளது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போது இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரியவில்லை. தங்களுடைய சொந்த மண்ணில் வாழமுடியாமலும், அகதிகளாக வெளியேற முடியாமலும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சிரியாவில் இருந்து படகுகளின் மூலம் பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்ல முற்பட்டு கடலில் மாண்ட மனித உயிர்கள் பல. சிரியா யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களில் ஏராளமானோர் அப்பாவி பொதுமக்கள். இந்த கொடூர யுத்தத்தில் ஒன்றுமே அறியாத பிஞ்சுகள் கொத்துக் கொத்தாக கொன்றுக் குவிக்கிறது. எதற்காக இந்த யுத்தம், தம்மை கொல்லப்படுவது யார் என்ற எதுவுமே தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கும் பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாக கொன்றுக் குவிக்கும் இந்தப் போரில் யாராவது வந்து தங்களை காப்பாற்ற மாட்டர்களா என மரணத்தின் விளிம்பில் நடுங்கி பலியாகிறது சிரியா குழந்தைகள்.