தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா?
தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் கேப்டவுன். இந்த நகரத்தில்தான் தண்ணீர் தீர்ந்து போகும் என்று கூறப்பட்டுள்ளது. உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் நகராகமாக கேப்டவுன் நகரம் உள்ளது. இதனால் அந்நகர மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
கேப்டவுன் நகரில் சுமார் 40 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வற்றி விட்டன. இதனால், நீர் மக்களின் தேவைக்கேற்ப அளந்தே திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்து கொண்டே வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
மழை பெய்யும் வரை, வீடுகள் - தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் சப்ளை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கார் சுத்தம் செய்தல், நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 80 லிட்டர் தண்ணீர் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் (பிப்ரவரி) 50 லிட்டராக குறைக்கப்படும் என்றும் தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், கேப்டவுன் மக்கள் பல வழிகளில் நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்துகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை குறித்து கேப்டவுன் நகர மக்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். கேப்டவுனில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாது, மக்களிடம் தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று அறுவுறுத்தப் போவதில்லை என்றும், அவர்களைக் கட்டாயப்படுத்த போகிறோம் கேப்டவுன் மேயர் அறிக்கையில் வலியுறுத்தி கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் கேப்டவுனில் நீர் முற்றிலும் தீர்ந்து போகும் என்றும் அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதற்கு காரணம், மக்கள் தொகை அதிகரிப்பும், பருவநிலை மாற்றம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.