குழந்தைகளை வைத்து 1000 டீப்ஃபேக் ஆபாசப் படங்களை உருவாக்கிய குற்றவாளிக்கு என்ன தண்டனை தெரியுமா?
குழந்தைகளை வைத்து 1,000 க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களை டீப்ஃபேக் மூலம் உருவாக்கியதற்காக ஆண்டனி டோவர் என்ற குற்றவாளி AI கருவிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாலியல் குற்றவாளி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு AI தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை வைத்து 1,000 க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களை டீப்ஃபேக் மூலம் உருவாக்கியதற்காக ஆண்டனி டோவர் என்ற குற்றவாளிக்கு இந்தத் தடையை பிரிட்டன் நீதிமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துபூர்வ கமாண்டுகள் மூலம் நிஜத்தைப் போன்ற தோற்றத்துடன் படங்களை உருவாக்கக்கூடிய டெக்ஸ்ட்-டு-இமேஜ் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த டோவருக்கு தடை விதிக்கபட்டுள்ளது. டீப்ஃபேக் படங்களை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படலாம் என்பதற்காக இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஸ்டேபிள் டிஃப்யூஷன் (Stable Diffusion) சாப்ட்வேரையும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பூல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது. விசாரணையை அடுத்து, 48 வயதான டோவருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. மேலும், 200 பவுண்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான ஆபாசப் படங்களை உருவாக்குவது குற்றமாக்கப்படும் என்று பிரிட்டன் அரசாங்கம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு குற்றவியல் நீதி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இது குறித்துக் கூறும் அமைச்சர் லாரா ஃபாரிஸ், "டீப்ஃபேக்குகளை உருவாக்குவது ஒழுக்கக்கேடானது, வெறுக்கத்தக்க குற்றம் என்று இந்தச் சட்டம் தெளிவுபடுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
டீப்ஃபேக் ஆபாசப் படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர விரும்பாவிட்டாலும், அவற்றை உருவாக்கி வைத்திருந்தாலே குற்றம் என்று பிரிட்டனில் நிறைவேற இருக்கும் சட்டதிருத்தம் கூறுகிறது. டீப்ஃபேக் படங்கள் பகிரப்பட்டால், அதை உருவாக்கியவர் சிறையில் அடைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கிறது.