துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஓமனில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிவிட்டு மஸ்கட்டில் சுமார் 31 பயணிகளுடன் துபாய் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். 
அதில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர் பயணம் செய்தனர். இந்தப் பேருந்து, துபாயின் தெற்கு பகுதியில் உள்ள அல் ரஷிதியா என்ற இடத்தில் நேற்று மாலை 5.45 மணிக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது, பாதை மாறி மெட்ரோ ரயில் ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையில் வேகமாக சென்றது. அது பேருந்துக்கான பாதை அல்ல. கார்கள் மட்டுமே செல்ல முடியும். இதனால் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பில், வேகமாக சென்ற பேருந்து மோதியது. 

இந்த விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்களை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. ராஜகோபாலன், பெரோஸ்கான் பதான், ரேஷ்மா பெரோஸ்கான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்காவீட்டில், கிரண் ஜானி, வாசுதேவ், திலக்ராம் ஜவஹர் தாகூர் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 4 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.