விண்வெளி சொகுசு ஹோட்டலில் தங்க நீங்க ரெடியா? ரிசர்வேசன் தொடங்கிருச்சு !! கட்டணம் எவ்வளவு தெரியுமா ?
விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் உணவகத்திற்கு சென்று, தங்குவதற்கும், உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
விண்வெளி உணவகத்துக்குச் சென்று குடுப்பத்தோட சாப்பிடப் போறோம் என நாம சொல்லக் கூடிய நேரம் தற்போது வந்துருச்சு….ஆமாங்க அமெரிக்காவைச் சேர்ந்த ஓரியன் ஸ்பான் என்ற நிறுவனம் தற்போது விண்வெளியில் சொகுசு உணவகம் ஒன்றைக் கட்டி வருகிறது. வரும் 2022-ஆம் ஆண்டு இந்த சொகுசு உணவகம் திறக்கப்படுகிறது.
இதற்கு “அயூரா விண்வெளி ஹோட்டல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 200 மைல் தூரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த சொகுசு உணவகம் கொண்ட ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.
இரண்டு பேர் தங்கும் சொகுசு அறை கொண்ட இந்த உணவகத்துக்குச் செல்ல மொத்தம் 12 நாள் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்னதாக 3 மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதல்கட்டமாக ஒரு குழுவில் 6 பேர் அனுப்பப்படுவார்கள். விண்வெளி வீரர்கள் இரண்டு பேரும் குழுவில் இருப்பார்கள்.
இந்த பயணத்துக்கான முன்பதிவை ஓரியன் ஸ்பான் நிறுவனம் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. பயணக் கட்டணம் ஜஸ்ட் 55 கோடி ரூபாய்தான் என்கிறது ஓரியன் ஸ்பான் நிறுவனம். இதற்கு , முன்பதிவுக் கட்டணமாக 5 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் இருந்தபடியே, இதுவரை கண்டிராத பூமியின் அழகைக் கண்டு ரசிக்கவும், இந்த விண்வெளி அனுபவத்தைக் கொண்டு ஆய்வில் ஈடுபடவும் இந்தப் பயணம் வழிவகுக்கும்.
புவிவட்டத்தில் 90 நிமிடங்களில் ஒரு சுற்றுப் பாதையை முடிக்கும் இந்த உணவகத்தில் இருந்து ஏராளமான சூரிய உதயங்களையும், அஸ்தமனங்களையும் காணலாம். இந்த உணவகத்தின் பரப்பளவு 43.5 அடி நீளமும், 14.1 அடி அகலமும் கொண்டதாகும்.
வருங்காலங்களில் இந்த உணவகத்தின் விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்படும். விண்வெளியின் சுற்றுப்புறத்தைக் காண, வழக்கத்துக்கு மாறாக ஏராளமான ஜன்னல்கள் இந்த விண்கலத்தில் அமைக்கப்படுகின்றன.
கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள விரும்பவில்லை என்றாலும் முன்பதிவாளர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும். இந்தப் பயணத்தை பிறருக்கு பரிசாகவும் அளிக்கலாம் என்று ஸ்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிசர்வ் பண்ண ரெடியா நீங்க ?