பொலியாவில் பத்து ஆண்டுகளாக ‘பேச்சுலர்’ வாழ்க்கை நடத்திய ரோமியோ என்ற தவளைக்கு ஜூலியட் என்ற பெண் தவளை ஜோடியாகக் கிடைத்திருக்கிறது.

பொலிவியாவில் ‘சேவென்காஸ்’ (Sehuencas) என்ற நன்னீர் வகை தவளையை 10 ஆண்டுகளுக்கு முன்பு விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். ஆராய்ச்சியின் முடிவில் இந்த தவளைதான் இந்த இனத்தின் கடைசி ஆண் தவளை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தனர். இந்தத் தவளைக்கு ‘ரோமியோ’ என பெயர்சூட்டி நீர்வாழ் கண்காட்சியகத்தில் வைத்து பராமரித்துவந்தார்கள்.

இந்தத் தவளைக்கு ஜோடி தேட இதே இனத்தைச் சேர்ந்த பெண் தவளையைத் தேடிவந்தார்கள். பொலியாவில் பல ஆண்டுகளாக நடந்தவந்த தேடுதல் வேட்டை ஆராய்ச்சியாளர்களுக்கு சிக்கலாக இருந்தது. பெண் தவளை கிடைக்காமல் அலைந்தனர். பெண் தவளை தேட அதிக செலவும் ஆனது. இதனால், ரோமியோ தவளைக்கு ஜோடி தேடும் தவல்களை கடந்த ஆண்டு இணையத்தில் ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்தனர். இதற்காக தனியாக இணையதளமும் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக உலக அளவில் பிரபலமான ரோமியோ தவளைக்கு நிதி உதவியும் குவிந்தது.

கடந்த ஓராண்டாக பெண் தவளையைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், தற்போது ரோமியோவுக்கு ஏற்ற ஜோடியைக் கண்டுபிடித்துவிட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்நாட்டு வனப்பகுதியில் அரிய வகையைச் சேர்ந்த 5 தவளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், ‘சேவென்காஸ்’ இனத்தைச் சேர்ந்த இரு பெண் தவளைகளும் இருந்தன. இதில் ரோமியோவுக்கு ஏற்ற ஜோடியை அடையாளம் கண்டுவிட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள். ரோமியோவுக்கு ஜூலியட் கிடைத்த மகிழ்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். இந்த விஷயம் ரோமியோ தவளைக்கு தெரியுமா என்று கேட்டுவிடாதீர்கள்!!