சீனாவில், 4 கோடி மக்கள் வாழும் 13 நகரங்களை கொண்ட "வுகான்" மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான சேவை என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஒரு மாகாணம் முழுவதையும் சிறைவைத்தது போல் உள்ளதாக அந்த பகுதியில் வாழக்கூடிய மக்கள் தெரிவிக்கிறார்கள். 

இந்த பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார், 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியை முழுவதுமாக வெளியுலகில் இருந்து தனிமைப்படுத்தி அறிவித்துள்ளது சீன அரசு. 1,000 படுக்கைகளை கொண்ட புதிய மருத்துவமனையை 6நாட்களில் கட்டிமுடிக்க பணிகளை முடுக்கிவிட்டுள்ளது அந்த அரசு. காலநிலை மாற்றம் மனிதர்களுக்கான சுகாதாரம் சார்ந்து கடந்த 70 ஆண்டுகளாக நாம் பெற்ற முன்னேற்றத்தை முன்நகர்வுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று கடந்த மாதம் லான்செட் ஆய்வு அறிக்கை தெளிவாக்கியது. 

மேலும் புதுப்புது வைரஸ் கிருமிகள் மனித குலத்தை தாக்குமென்றும், அதனை கட்டுப்படுத்த வழிவகை இல்லாமல் போகும் என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தது அந்த ஆய்வு. பனிப்பாறைகள் உருக உருக இதுகாலமும் வெளியேவராமல் இருந்த வைரஸ் கிருமிகள் புதிதாக வெளிவருமென்றும் தெரிவித்திருந்தது ஆய்வு. ஏந்திகள்வழி பரவும் நோய்கள் (vector borne diseases) அதிகரிக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டிருந்தது என பூவுலகின் நண்பர்கள் குழு சுந்தர்ராஜன்
எச்சரித்துள்ளார்.