ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து …. 71 பேர் உயிரிழந்த பரிதாபம் !!
ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்கள்ளானதில் 6 ஊழியர்கள் உட்பட 71 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷியாவின் உள்நாட்டு விமான நிறுவனமான சரதோவ் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவின் டோமோடிடோவோ விமான நிலையத்தில் இருந்து யூரல்ஸ் மாவட்டத்தின் ஒர்ஸ்க் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 65 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என மொத்தம் 71 பேர் இருந்தனர்.
இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ராடாரில் இருந்து மறைந்தது. பின்னர் அது மாஸ்கோ அருகே உள்ள ராமென்ஸ்கை மாவட்டத்தில் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் கடும் பனிபொழிவு காரணமாக சாலை வழியாக சம்பவ இடத்துக்கு செல்ல முடியவில்லை. எனவே மீட்புக்குழுவினர் நடந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். பல மீட்டர் சுற்றளவுக்கு சிதறிக்கிடந்த விமானத்தின் உடைந்த பாகங்களையும் அவர்கள் மீட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார்.
இதைப்போல போக்குவரத்து அமைச்சரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது மனித தவறு காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.