பெரு நாட்டின் வடக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.  

இன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.5-ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இதை தொடர்ந்து தென் அமெரிக்கா நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.  

இந்நிலநடுக்கம் ஆனது லகுனாஸ் என்ற கிராமத்தின் தென்கிழக்கே 80 கி.மீட்டர் தொலைவிலும், யூரிமேகுவாஸ் என்ற பெரிய நகரத்தின் வடகிழக்கே 158 கி.மீட்டர் தொலைவிலும், 114 கி.மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவிசார் ஆய்வு தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 7.40 மணியளவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள பிரேசில், கொலம்பியா மற்றும் ஈக்குவேடார் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ளன. இதனால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அதேசமயம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. உயிர் சேதம் விவரம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.