திருமணம் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருந்து சுமார் 629 பெண்கள் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டு அவர்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.  சீனாவின் நட்பு பாதிக்கும் என்பதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதில் வாய் திறக்காமல் மௌனம் காப்பதாக பாகிஸ்தான் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.  பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறும் சீனர்கள் அவர்களை சீனா அழைத்துச் சென்று கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது உறவினர்களுக்கு போனில் கதறியதைத் தொடர்ந்து அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார்.  தம்மைப் போன்று இன்னும் பல பெண்கள் சீனாவில் சிக்கி பாலியல்  கொடுமைக்கு ஆளாகி வருவதாக அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.  கடந்த ஜூன் மாதம் இது தொடர்பான புகார்கள் எழுந்தன  ஆனால் பாகிஸ்தான் அரசு இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.   சீனாவில் பாகிஸ்தான் பெண்கள் சந்தித்து வரும்  கொடுமைகள் குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.  இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி வரும்  அதிகாரி ஒருவர்,  வறுமை காரணமாக பாகிஸ்தான் பெண்கள் சீனர்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.  பின்னர் அவர்கள் இங்கு கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

 

இதுதொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆனால் மிரட்டல் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சாட்சி கூற மறுத்து வருகின்றனர் எனவே இதில் கைது செய்யப்பட்ட 31 பேரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆனால் இது குறித்து  அரசுக்கு எந்த கவலையும் இல்லை,  இதனால் குற்றவாளிகளையும்  ஒன்றும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  இதே நிலை தொடர்ந்தால் பாலியலுக்காக பாகிஸ்தான் பெண்கள் கடத்தப்படுவதை தடுக்க முடியாமல் போகும் என அவர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள இருநாட்டு சமூக ஆர்வலர்கள் சிலர் சீனா பாகிஸ்தான் உறவில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக குற்றவாலிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. 

இந்த விசாரணையை முடிந்த அளவுக்கு நீர்த்துப்போகச் செய்யவே அரசு முயற்சிக்கிறது.  இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்களை சந்தித்து பேச முயன்றோம் ஆனால் அவர்கள் இதுகுறித்து பேச மறுத்துவிட்டனர். ஏற்கனவே பாகிஸ்தான் போருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால், இந்நேரத்தில் சீனாவை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை அதனால்தான்  பிரதமர் இம்ரான்கான் இதை பெரிய விஷயமாக கருதாமல் உள்ளார்.  ஆனால் சர்வதேச செய்தி ஊடகங்கள் மூலம் இப் பிரச்சனை சர்வதேச அளவிற்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது.  இனிமேலாவது  சீனா- பாகிஸ்தான் அரசுகள்  இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என அவர்கள்  தெரிவிக்கின்றனர்.