சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதால் அவர் இருக்கும் இடம்  விரைவில் கண்டுபிடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இரண்டு சிஷ்யைகளை கடத்திய வழக்கில்  நித்யானந்தாவுக்கு எதிராக குஜராத் போலீஸ் புளு கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது. நித்யானந்தா எங்கு தலைமறைவாக உள்ளார் என்பதை கண்டறிய புளூ கார்னர் நோட்டீஸ் உதவும். 

நித்யானந்தா கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி முதல் முதலாக ஈக்வடார் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளார். ஈக்வடார் நாட்டில் உள்ள குயாக்கூல் என்ற துறைமுக நகருக்கு சென்ற அவர் அங்கேயே தங்கி இருந்தார். அங்கிருந்து சர்வதேச பாதுகாப்பு கேட்டும், ஈக்வடார் நாட்டின் அகதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். 

இதையடுத்து, ஈக்வடாரில் தற்காலிகமாக தங்குவதற்காக 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ம் தேதி அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சர்வதேச பாதுகாப்பு வேண்டியும், அகதியாக கருத வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் பரிசீலித்த ஈக்வடார் அரசு, நித்யானந்தாவுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டது.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஜூலை முதல் ஈக்வடாரில் தங்கியிருந்த நித்தியானந்தா 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஈக்வடாரில் இருந்து வெளியேரும் முன்பாக, நான் அடுத்து செல்லப்போகும் இடம் கரீபியன் கடல் அருகே உள்ள ஹைட்டி தீவாக இருக்கும் என்று நித்யானந்தா சொல்லி சென்றதாக ஈக்வடார் தூதர் கூறியிருந்தார். 

இதற்கிடையே, நித்யானந்தாவின் கைலாசா இணையதளத்தின் ஐபி முகவரியின் அடிப்படையில், அவர் பனாமா கால்வாய்க்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் இருக்கலாம் எனக் கூறப்பட்டது. அவருக்கு எந்த நாடுகளும் அடைக்கலம் அளிக்க முன்வராததால் சொகுசுக்கப்பலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கடலுக்குள் நித்யானந்தா தனது சிஷ்யைகளுடன் சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நித்யானந்தாவின் இருப்பிடத்தகவலை பெற குஜராத் காவல்துறையின் கோரிக்கையை ஏற்று ப்ளூகார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல். வழக்கில் தலைமறைவாக உள்ள நபரைக் கண்டால் தகவல் அளிப்பதே ப்ளூ கார்னர் நோட்டீஸ்.  இதனால் நித்யானந்தா விரைவில் அகப்படுவார் என கூறப்படுகிறது.