ஜில்லுன்னு வைக்க வேண்டாம்.… வந்தாச்சு புதிய கொரோனா தடுப்பூசி… அமெரிக்கா அசத்தல்
குளிர்சாதன வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசியை அமெரிக்க மருத்துவக்குழுவினர் கண்டுபிடித்து அசத்தி இருக்கின்றனர்.
குளிர்சாதன வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசியை அமெரிக்க மருத்துவக்குழுவினர் கண்டுபிடித்து அசத்தி இருக்கின்றனர்.
சீனாவில் மருத்துவ நகரமான உகானில் இருந்து 2019ம் ஆண்டு இறுதியில் உலகிற்கு முதன் முதலாக கொரோனா என்னும் வைரஸ் அறிமுகமானது. படிப்படியாக, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என 200க்கும் மேற்பட்ட நாடுகளை பதம் பார்த்தது.
இந்த நிமிடம் வரை உலக நாடுகளில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கையும் நாள்தோறும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் தடுப்பூசிகளை உருவாக்குவதில் உலக நாடுகள் பெரும் முயற்சி எடுத்து பின்னர் சாதித்தன.
அந்தந்த நாடுகளுக்கு என கொரோனா தடுப்பூசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவில் தற்போதுள்ள நிலையில் மொத்தம் 3 விதமான கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. தடுப்பூசி தயாரிக்கப்பட்ட ஆரம்ப நிலையில் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது.
அதன் பின்னர் 60 வயதை கடந்தவர்கள், 45 வயதை கடந்தவர்கள் என பிரிக்கப்பட்டு படிப்படியாக கொரோனா தடுப்பூசி இயக்கம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 18 வயது கடந்தவர்கள் வரை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் குறித்து ஆராய்ச்சிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா தடுப்பூசிகளை குளிர்பதன வசதி கொண்ட அறையில் அல்லது குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டும். அப்படி கவனிப்புடன் பராமரிக்காமல் விட்டால் தடுப்பூசியின் வீரியமும், செயல்திறனும் இழக்கப்படும். இதன் மூலம் தடுப்பூசியானது பயனற்று போகும் என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
விஞ்ஞானிகள், மருத்துவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பல தருணங்களில் தடுப்பூசிகள் அதிகளவு வீணடிக்கப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் அமெரிக்க மருத்துவ குழு இறங்கி அதில் இப்போது வெற்றியும் கண்டிருக்கிறது.
அந்நாட்டின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள குழுவினர் குளிர்பதன வசதி தேவைப்படாத கொரோனா தடுப்பூசியை உருவாக்கி சாதனை படைத்து இருக்கின்றனர்.
கொரோனா வைரஸில் இருக்கக்கூடிய புரதத்தை பயன்படுத்தி இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட தடுப்பூசியை மருத்துவக்குழுவினர் உருவாக்கி அசத்தி உள்ளனர். மருத்துவக்குழுவின் இந்த வகை தடுப்பூசியை தயாரிப்பது மிக எளிது என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றுகளுக்கு எதிராகவும் இந்த தடுப்பூசி பக்காவாக செயல்படுவதையும் மருத்துவக்குழுவினர் கண்டறிந்து இருக்கின்றனர். வழக்கமாக நாம் பயன்படுத்தும் அறை வெப்பநிலையில் (room temperature) இந்த வகை தடுப்பூசிகளை ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாம்.
அந்த காலக்கட்டத்தில் தடுப்பூசியின் செயல்திறனில் எவ்வித மாற்றத்தையும் காணவில்லை என்றும் அதன் செயல்திறன் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். இதுபோன்ற தடுப்பூசிகளை பாதுகாப்பதற்கு என நவீன முறையிலான தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.
உலக நாடுகளில் தடுப்பூசி விழிப்புணர்வில் காணப்படும் இடைவெளியை இத்தகைய கண்டுபிடிப்பானது ஈடு செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த புதிய தடுப்பூசியை மற்ற நோய்களுக்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் தகவல். புதிய வகை கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை பெறும் முயற்சியில் மருத்துவக்குழுவினர் மும்முரமாக இறங்கி உள்ளனர். மேலும், அதனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.