கல்லாக மாறிய நிஜ மனிதர்கள்... அந்தக்கால திகில் சம்பவம்!
அந்தக் கால மாயாஜாலப் படங்களில், மனிதர்களைக் கல்லாக மாற்றும் காட்சிகள் சர்வ சாதாரணமாக வரும். உண்மையில் மனிதர்கள் கல்லாக மாற முடியுமா? நிச்சயம் முடியவே முடியாது. ஆனால், இயற்கைப் பேரழிவால் மனிதர்கள் கல்லாக மாறிய சம்பவம் நடந்திருக்கிறது.
இத்தாலியில் பாம்பெய், ஹெர்குலானியம் என இரு நகரங்கள் இருந்தன. இரு நகரங்களுக்கும் அருகே மவுண்ட் வெசுவியஸ் என்ற எரிமலை இருந்தது. எப்போதும் அமைதியாக இருந்த இந்த எரிமலைக்கு என்ன கோபமோ தெரியவில்லை. கி.பி. 79-ம் ஆண்டில் தன் சுயரூபத்தைக் காட்டியது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் ஒரு சந்தோஷமான தினத்தில் மகிழ்ச்சியைக் கழித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது திடீரென எரிமலை வெடித்துச் சிதறியது. கண் இமைக்கும் நேரத்தில் பாம்பெய், ஹெர்குலானியம் நகரமெங்கும் புகை சூழந்தது. லாவா எனப்படும் நெருப்புக் குழம்பு வழிந்தோடியது. இந்தக் கோரச் சம்பவத்தில் மக்கள் என்ன ஆனார்கள் என்றுகூடத் தெரியவில்லை. இரு நகரங்களும் நெருப்புக் குழம்பில் சிக்கி முழுமையாக மண்மேடாகின.
ஒரு காலகட்டத்தில் இரு நகரங்களையும் எல்லோரும் மறந்தே விட்டனர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் ஹெர்குலானியம் இருந்த இடத்துக்கு வந்தார்கள். புதைந்திருந்த இரு நகரங்களையும் 1738-ம் ஆண்டு முழுமையாகத் தோண்டி ஆய்வு செய்தார்கள். சுமார் 12 அடுக்கு மண் படிவங்கள் இரு நகரங்களையும் மூடி மண் மேடாக்கியிருந்தன. மனிதர்கள், குழந்தைகள், விலங்குகள் என எல்லோர் மீதும் நெருப்புக் குழம்பு பாய்ந்ததில், அனைவரும் நிஜ கல்லாகவே மாறி இருந்தார்கள்.
கல்லாக மாறிய மனிதர்கள் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு அந்நாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இப்படி ஒரு சோகமான வரலாற்றுப் பின்னணி கொண்ட அந்த இரு நகரங்களும் இப்போது முக்கியச் சுற்றுலாத் தளங்களாக உள்ளன.