சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 409 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இதுவரை உயிரிழப்பு 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 35 நாடுகளில் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உத்தரவிட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடுமையான சட்டங்களை முன்னெடுத்த சீனா,  மொத்த நகரங்களையும் மூடி சீல் வைத்துள்ளது. பல இடங்களில் 10 ஆயிரம் பேருக்கும் சிகிச்சை அளிக்கும் படி பிரம்மாண்ட மருத்துவமனைகளை உருவாக்கி தீவிர சிகிச்சை அளித்தது. சீனா அரசின் இந்த தீவிர முயற்சியால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. 

ஆனால் இந்த கொரோனா வைரஸ் தற்போது தனது கோர முகத்தை இத்தாலியில் காட்டி வருகிறது. குறைவான மருத்துவமனை மற்றும் மருத்துவ ஊழியர்கள் மட்டுமே இருப்பதால் கொரோனாவை எதிர்த்து போராட முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது. இறக்கும் மக்களின் உடல்களை அப்புறப்படுத்த கூட ஆள் இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. தற்போது வரை இத்தாலியில் 5,476 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளதாகவும், 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணிக்கை சீனாவையே பின்னுக்குத்தள்ளியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் செயல் இழந்துவிட்ட இத்தாலி அரசு, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முதியோரை கொரோனா வைரஸ் அதிக அளவில் தாக்கி வரும் நிலையில், இத்தாலி அரசின் இந்த பொறுப்பற்ற அறிவிப்பு மேலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

 இத்தாலிக்கு அடுத்ததாக கொரோனா வைரஸ் ஈரானில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கடும் சட்டங்களை போட்டு, கொரோனாவை விரட்ட பாடுபட்டு வரும் ஈரான் அரசு, கொரோனா பாதிப்பால் ஏற்படும் மரணங்களை மறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 2500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஈரான் அரசோ 1500 பேர் மட்டுமே இறந்துள்ளதாக கணக்கு காட்டி வருகிறது.  அதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அப்புறப்படுத்தாமல், கறுப்பு கலர் பைகளில் அடைத்து குவிக்கப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் உலகின் வல்லரசு நாடுகளே தவித்து வரும் போது,கொடூர வைரஸின் தாக்கத்தை எதிர்த்து களம் இறங்கியுள்ள இந்திய அரசுக்கு மக்கள் ஆதரவளித்து வருகின்றனர். பிரதமர் மோடி அவர்கள் அழைப்பு விடுத்த மக்கள் ஊரடங்கிற்கு நேற்று அளிக்கப்பட்ட ஆதரவே முதல் சாட்சி. 

இந்தியாவில் தற்போது ஸ்டேஜ் 2 கொரோனா வைரஸ் மட்டும் பரவி வருகிறது. அதனை 3வது கட்டத்திற்கு பரவவிட்டால் இந்தியாவின் நிலை மேலும் மோசமடையும் என்பதை தெரிந்து கொண்ட மத்திய, மாநில அரசுகள் புயல் வேகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரி, மால்கள், பூங்காக்கள், தியேட்டர்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன. தனியார் நிறுவன ஊழியர்கள் பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், நகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் தங்களது உயிரையும் பணயம் வைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே “கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு” என துள்ளிக்குதித்து வருகின்றனர். அவர்களும் கொரோனா தீவிரத்தை உணர்ந்து ஒத்துழைப்பு அளித்தால், இந்தியாவில் கொரோனா என்ற அரக்கனை எதிர்த்து போராட கூடுதல் பலம் கிடைக்கும்...!