துபாயில் பள்ளி பேருந்தில் தூங்கிய இந்திய சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பைசல். கேரளா மற்றும் துபாயில் பல தொழில்களை செய்துவரும் இவர் பல ஆண்டுகளாக மனைவியுடன் துபாயில் உள்ள கராமா என்னுமிடத்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.  இவரது 3-வது மகன் மொஹம்மத் பர்கான் பைசல் (3). அல்குவாசில் பகுதியில் உள்ள இஸ்லாமிய கல்வி மையத்தில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டார்.  

இந்நிலையில், வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்காக காலை 8 மணிக்கு பள்ளி பேருந்தில் மொஹம்மத் பர்கான் பைசல் ஏறினான். சிறிது நேரத்தில் பேருந்திலேயே அயர்ந்து தூங்கியுள்ளார். இதனையடுத்து, பள்ளியை நெருங்கியதும் அனைத்து மாணவர்களும் கீழே இறங்கி சென்றதும் ஓட்டுநர் வாகனத்தை பூட்டிவிட்டு வேறு வேலைகளை கவனிக்க சென்று விட்டார். 

ஆனால், தூக்கத்தில் இருந்த பர்ஹான் எழவில்லை. இதனை யாரும் கவனிக்கவில்லை. பேருந்து குளிர்ச்சாதன வசதி கொண்டது என்பதால் வெளிக்காற்று புகாத கண்ணாடிகளை கொண்டது. பிற்பகல் 3 மணிக்கு மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக ஓட்டுனர் பேருந்தை எடுக்க முயன்றார். அப்போது பேருந்தில் சிறுவன் பர்ஹான் மயங்கிய நிலையில் கிடந்தான். உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.