இந்தியாவைவிட சீனாவும் பாகிஸ்தானும் அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. பாகிஸ்தாலிடம் 160 அணு ஆயுதங்களும் இந்தியாவிடம் அதைவிட குறைவாக 150 அணு ஆயுதங்களும் மட்டுமே உள்ளதாக சிப்ரி அறிக்கையில் தெரிய வந்துள்ளது.  

சிப்ரி எனும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின்  பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச சிந்தனை குழு ஒரு ஆண்டறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் இந்தியாவைவிட சீனாவும் பாகிஸ்தானும் அதிக அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘’2020-ம் ஆண்டு ஜனவரி மாதக்கணக்குப்படி சீன ஆயுதக் களஞ்சியத்தில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது. அதே நேரம் பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்களும் இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்களும்உள்ளன. சீனா, பாகிஸ்தானைவிட இந்தியாவிடம் குறைந்த அளவிலேயே ஆயுதங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு சீனா 290 அணு ஆயுதங்களை வைத்திருந்தபோது, இந்தியாவும் அதன் அண்டை நாடும் இதே வரிசையில் இருந்தன. பாகிஸ்தானிடம் 150 முதல் 160, இந்தியாவிடம் 130 முதல் 140 வரையிலான அணு ஆயுதங்கள் 2019-ல் இருந்தன. அதே நேரத்தில் சீனா தனது அணு ஆயுதங்களில் குறிப்பிடத்தக்க வகையில் நவீனமயமாக்கலை மேற்கொண்டு வந்தது. இதனால், அணு ஆயுதங்களின் எண்ணிக்கையும் கூடியது. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணுசக்தி அளவையும் பன்முகத்தன்மையையும் மெதுவாக அதிகரித்து வருகின்றன.

6,375 மற்றும் 5,800 அணு ஆயுதங்களுடன் ரஷ்யாவும், அமெரிக்காவும் இணைந்து 90 சதவீதத்திற்கும் அதிகமான உலகளாவிய அணு ஆயுதங்களை வைத்துள்ளன. பிரிட்டனிடம் 215 அணு ஆயுதங்கள் உள்ளன. 9 அணு ஆயுத நாடுகளும் இணைந்து 2020 ஜனவரி மாத கணக்கின்படி 13,400அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன’’எனக் கூறப்பட்டுள்ளது.