கற்பழிப்பில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கப்படும்..!! புதிய சட்டத்திற்கு கொள்கை அளவில் பிரதமர் ஒப்புதல்.
பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமை போன்றவற்றிற்கு எதிரான கடுமையான தண்டனை வழங்கும் மூன்று அடுக்கு சட்டத்தை அரசு விரைவில் அறிமுகப்படுத்தும் என கூறியிருந்தார்.
பாகிஸ்தானில் நாளுக்குநாள் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்குவது தொடர்பான சட்ட வரைவுக்கு கொள்கை அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமை (நேற்று) இம்ரான்கான் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அப்போது சட்ட அமைச்சகம் சார்பில், கற்பழிப்பு எதிர்ப்பு கட்டளைச் சட்டத்தின் வரைவு முன் வைக்கப்பட்டதாகவும் ஜியோ தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது. போலீஸ் துறையில் பெண்களுக்கு அதிக பங்கு, விரைவான கண்காணிப்பு, கற்பழிப்பு வழக்குகள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு போன்றவை சட்ட வரைவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் கற்பழிப்பு சம்பவங்கள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது, கடந்த 2018 ஜனவரியில் நாகூரில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார், அதே லாகூரில் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒரு பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கான தண்டனையில் தீவிரம் குறித்து அது விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அண்மையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் இம்ரான் கான், பாலியல் குற்றவாளிகளை பதிவுசெய்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமை போன்றவற்றிற்கு எதிரான கடுமையான தண்டனை வழங்கும் மூன்று அடுக்கு சட்டத்தை அரசு விரைவில் அறிமுகப்படுத்தும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் பொதுமக்களும், அந்நாட்டின் அமைச்சர்களும் பாலியல் பலாத்கார குற்றவாளிகளை ஒடுக்க கடுமையான சட்டம் தேவை என்றும், அவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர். இதுதொடர்பாக அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நாட்டில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் தண்டனை வழங்கவும், கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும், பிரதமர் இம்ரான் கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. ஆனாலும் இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள தெஹ்ரீக்-இ-இன்சாஃப் செனட்டர் பைசல் ஜாவேத் கான், பக்கத்தில், இந்த இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.