இந்தியாவை மிரள வைக்கும் சீனா; அமைதியாக வங்கதேசம், மியான்மரில் ஆளுமை செலுத்தும் பீஜிங்!!

சீனா அண்டை நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இந்தியாவுக்குப் பல சவால்கள் ஏற்பட்டுள்ளன. வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளில் சீனாவின் பொருளாதார, அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தி, சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

How China influence Myanmar and Bangladesh economically

India China Bangladesh News in Tamil: இந்திய பெருங்கடலில் எப்போதும் தாதா போன்று செயல்பட்டு அண்டை நாடுகளுக்கு மிரட்டல் விடுவதுதான் சீனாவின் வேலையே. தன்னை சுற்றி இருக்கும் நாடுகளை வளைத்து போடுவது சீனாவுக்கு கைவந்த கலை.

இந்தியப் பெருங்கடலில் மட்டுமின்றி அண்டை நாடுகளிடமும் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எப்படி சீனாவின் வாயை அடைப்பது என்ற யுக்தியில் தற்போது இந்தியா இறங்கிவிட்டது. 

தெற்கு ஆசிய நாடுகளான வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த நாடுகளில் உள்கட்டமைப்பு, வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு என்று சீனா தனது வலையை விரித்துள்ளது. அண்டை நாடுகளில் சீனாவின் ஆளுமை அதிகரித்து வருவது இந்தியாவை கவலை அடையச் செய்துள்ளது. 

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அண்டை நாடுகளை பகைத்துக் கொள்ளாமல் அந்த நாடுகளுடன் நட்பை வளர்த்துக் கொள்வது இந்தியாவுக்கு முக்கியமாக இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளுடன் பொருளாதார கூட்டமைப்பு, தந்திர யுக்திகள், பாதுகாப்பு யுக்திகள் என சீனாவுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்க வேண்டியது இருக்கிறது.

தற்போது முதல் கட்டமாக மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து எழும் பிரச்சனைகளை இந்தியா துடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானின் சவாலையும் இந்தியா சமாளிக்க வேண்டியது இருக்கிறது.

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் 
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இடைக்கால அரசின் பொறுப்பை பேராசிரியர் மொஹம்மது யூனஸ் ஏற்றுக் கொண்டு இருக்கிறார். வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதது மற்ற நாடுகளுக்கு கதவை திறந்து வைத்தது போல் ஆகிவிட்டது. இந்த சூழலை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சீனாவை சமாளிக்க வேண்டுமானால், இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாட்டுடன் கைகோர்க்க வேண்டியது இந்தியாவுக்கு கட்டாயமாகி இருக்கிறது. 

குவாட் அமைப்பு 
இந்த சூழலை சமாளிக்கும் வகையில் 2007 ஆம் ஆண்டில் குவாட் அமைப்பு கொண்டு வரப்பட்டது. இந்த அமைப்பில் உறுப்பின நாடுகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க உள்ளன. இந்த அமைப்பை அப்போதைய ஜப்பான் பிரதமராக இருந்த மறைந்த ஷின்சோ அபே முன்னெடுத்தார். இதற்கு ஆதராவாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இருந்தார். 

இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் வங்கதேசம்
இந்த நிலையில்தான் வங்கதேசத்திற்கு முக்கியமான நட்பு நாடாக இந்தியா இருக்கிறது என்று வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இருக்கும் பிரதமர் ஷேக் ஹசினா தான் வாக்கரை ராணுவ தலைமை தளபதியாக நியமித்து இருந்தார். வங்கதேசத்தில் இருந்து எந்தவித சிக்கலும் இல்லாமல் ஹசீனா வெளியேறுவதற்கும் உதவியர்தான் வாக்கர். 

How China influence Myanmar and Bangladesh economically

வங்கதேசத்தில் இருந்து வெளிவரும் புரோதம் அலோ என்ற செய்தித்தாளுக்கு வாக்கர் உஸ் ஜமான் பேட்டி அளித்து இருந்தார். அவர் அளித்து இருந்த பேட்டியில், ''எங்களது முக்கிய நட்பு நாடு இந்தியா. இந்தியாவை சார்ந்து நாங்கள் இருக்கிறோம். எங்களிடம் இருந்து இந்தியாவும் பயன் அடைகிறது. இந்தியர்கள் பலர் இங்கே வேலை செய்கிறார்கள். அதேபோல் வங்கதேசத்தினர் பலர் இந்தியா சென்று சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். நாடுகளுக்குள் நன்மைகளைத் தேடுவது இயல்பானது. மேலாதிக்கம் செலுத்துவது நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையை குறைத்துவிடும். இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு தனது அதிகாரத்தை திணிக்கிறது என்ற எண்ணம் இருக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் வணிகம் பாதிப்பு:
வங்கதேசத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பது, இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை பாதிக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி தென் கிழக்கு ஆசிய நாடுகளின் வர்த்தகம், இந்தியப் பெருங்கடல் வணிகம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகளவில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்தப்படுகிறது. போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது என்று காலம் காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஏன் இந்த பகுதிகளில் தனியார் ராணுவமும் செயல்பட்டு வருகிறது. 

இந்த மண்டலத்தில் இருக்கும் மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் அதிரடியாக ஆங் சான் சூகி அரசை விரட்டி அடித்தது. மியான்மரில் இருந்து விரட்டியடிக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியா, வங்கதேசம் என்று அண்டை நாடுகளுக்கு ஊடுருவி வருகின்றனர். இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இருக்கும் இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசும் தெளிவாக தெரிவித்துள்ளது. வங்கதேசமும் இவர்களை ஆதரிக்கவில்லை. 

வங்கதேசம் மற்றும் மியான்மரின் அராகன் ராணுவம் (AA) இடையிலான நெருங்கிய உறவு இந்தியாவின் ராணுவ மற்றும் நிர்வாக திட்டங்களுக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடும். அதற்கான உதாரணங்களை பார்க்கலாம்.

சித்துவே துறைமுகத்தின் முக்கியத்துவம்
மியான்மரின் ராகைனில் அமைந்திருக்கும் சித்துவே ஆழ்கடல் துறைமுகம், இந்தியாவின் கலாதான் பல்முகப்பாதை போக்குவரத்து திட்டத்தின் முக்கிய அங்கமாகும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்காள விரிகுடாவின் வழியாக இணைக்கும் திட்டமாக உள்ளது.

வங்கதேசம் - அராகன் ஒத்துழைப்பு தாக்கங்கள்
வங்கதேச ராணுவம், அராகன் ராணுவம் இடையே இணைக்கம் இருப்பது ராகைன் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது மியான்மரில் இந்தியாவின் திட்டங்களுக்கும், பாதுகாப்பு மேலாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருக்கிறது. 

இந்தியாவின் மீது தாக்குதல் 
எல்லைகளில் தனது தந்திரங்களை செயல்படுத்துவதற்கு இந்தியா கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்குள் எளிதாக சீனாவின் உதவியுடன் மியான்மரின் அராகன் ராணுவம் நுழைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மியான்மரில் இருக்கும் பல்வேறு ராணுவ குழுக்களுடன் இணைப்பை ஏற்படுத்தி இருக்கும் சீனா இந்தியாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் இருந்து வருகிறது. இந்த சூழலை எதிர்கொள்ள அன்டை நாடுகளான மியான்மர், வங்கதேசத்துடன் இந்தியா உறவுகளை புதுப்பிக்க வேண்டியது உள்ளது. 

வடகிழக்கில் மாநிலங்களில் மியான்மரில் இருந்து வரும் கிளர்ச்சிகளைக் கையாள்வது இந்தியாவுக்கு முக்கியமானது. இருநாடுகளும் 1,643-கிமீ எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. எல்லையில் செயல்படும் கிளர்ச்சி குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்காக மியான்மர் ஆயுதப் படைகளுக்கு இந்தியா பயிற்சி மற்றும் ராணுவ உதவிகளை வழங்குகிறது.

மியான்மரில் இந்தியா முதலீடு:
மியான்மரில் இந்தியாவும் எரிவாயு, எண்ணெய் என்று பல்வேறு துறைகளில் முதலீடு செய்து இருக்கிறது. சீனாவின் தலையீட்டை குறைப்பதற்காகவே மியான்மரில் இந்தியா அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. மியான்மரில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை சீனா துவக்கியுள்ளது. இது, இந்தியாவை பாதிக்கும் என்பதால், இந்தியாவும் மியான்மரில் தனது பங்களிப்பை அதிகரித்து வருகிறது. 

வங்கதேசத்தில் சீனாவின் தலையீடு:

வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய இரண்டு நாடுகளும் குறிப்பிடத்தக்க சீன முதலீடுகளை கொண்டுள்ளன, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக களத்தில் இந்தியாவிற்கு போட்டியை சீனா உருவாக்குகிறது. வங்கதேசத்தின் மிகப்பெரிய வர்த்தககூட்டாளியாக சீனா உள்ளது. 2022 -ல், இருதரப்பு வர்த்தகம் 27 பில்லியன் டாலர்களைத் தாண்டியது. இயந்திரங்கள், மின்னணுவியல் மற்றும் தொழில்துறை பொருட்களின் அதிக இறக்குமதி பெரும்பாலும் சீனாவுக்கு ஆதரவாக உள்ளது.

2021 ஆம் ஆண்டில், ஆடைகள், தோல் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற முக்கிய பொருட்கள் உட்பட 97% வங்கதேச நாட்டின் ஏற்றுமதிக்கு சீனா வரி சலுகை வழங்கியது. இந்த நடவடிக்கை வங்கதேசத்தின் ஏற்றுமதியை  கணிசமாக உயர்த்தியுள்ளது.

முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள்:
வங்கதேசத்தில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களைக் கட்டியெழுப்புவதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. 
பத்மா பாலம் ரயில் இணைப்பு திட்டம்: வங்கதேசத்தை அண்டை நாடுகளுடன் இணைத்தல் 
டாக்கா விமான நிலைய விரிவாக்கத் திட்டம்: விமானத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
துறைமுக திட்டங்கள்: சட்டோகிராம் துறைமுகத்தை நவீனமயமாக்கல் மற்றும் பயரா ஆழ்கடல் துறைமுகத்தை மேம்படுத்துவது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs):
சட்டோகிராமில் உள்ள சீனா-வங்கதேச நட்புறவு தொழில் பூங்கா போன்ற தொழில்துறை மையங்களை உருவாக்குவதில் சீன நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன. இப்படி சீனா வங்கதேசத்தில் பொருளாதார ரீதியாக ஊடுருவி இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. 

மியான்மரில் சீனாவின் அதிக முதலீடு:
முக்கியமான உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மியான்மரில் மிகப்பெரிய முதலீட்டாளராக சீனா உள்ளது.

முக்கிய திட்டங்கள்:
கியாக்ஃபியு ஆழ்கடல் துறைமுகம்: சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் (பிஆர்ஐ) ஒரு முக்கிய பகுதி, மியான்மாரை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. சீனா மலாக்கா ஜலசந்தியை கடல் சார்ந்த வணிகத்திற்கு சார்ந்து இருப்பதை இது குறைக்கிறது. 

மியான்மரில் சீனாவின் திட்டம்:
சீனா-மியான்மர் பொருளாதார வழித்தடம் (CMEC): மத்திய மியான்மருடன் யுனான் மாகாணத்தை இணைத்தல், வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புகளை மேம்படுத்துதல்.

நீர்மின் திட்டங்கள்: மைட்சன் அணை கட்டுவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதையும் மீறி சீனா இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது.

இவ்வாறு சீனா அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் சத்தம் இல்லாமல் மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு என்று தனது ஆளுமையை பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக அதிகரித்து வருவது இந்தியாவை சிந்திக்க வைத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios