இங்கிலாந்து நாட்டில் சுமார் 10 ஆயிரம் மாணவர்களைக் கொண்ட கோல்ட்ஸ்மித்ஸ் லண்டன் பல்கலைக்கழகத்தில் மாட்டுக்கறி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் மிக முதன்மையான உணவாக உள்ள மாட்டுக்கறி, இந்த பல்கலைக்கழகத்தில் தடை செய்யப்பட்டதற்கு மதரீதியான காரணங்கள் எதுவும் இல்லை!

கோல்ட்ஸ்மித்ஸ் லண்டன் பல்கலைக்கழகம் அண்மையில் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள், தங்களது பல்கலைக்கழகத்தால் வெளியாகும் கரியமிலவாயு அளவை 'பூஜ்யம்' ஆக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதற்காக, பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டுள்ளது.

மீன், கோழி போன்றவை 100 கிராம் உற்பத்தி செய்தால், 3 கிலோ 800 கிராம் கரியமிலவாயு வெளியாகும். அதுவே மாட்டுக்கறி உற்பத்திக்கு 7 கிலோ 200 கிராம் கரியமிலவாயு வெளியாகும் என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதாவது, மீன், கோழியை விட - மாட்டுக்கறியால் இருமடங்கு கரியமிலவாயு வெளியாகிறது. எனவே, கரியமிலவாயு வெளியாவதை அனைத்து வழிகளிலும் குறைக்கும் நோக்கில் இந்த பல்கலைக்கழகத்தில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டுள்ளது.

மாட்டுக்கறி தடை மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மீது இந்திய மதிப்பில் சுமார் 9 ரூபாய் வரிவித்துள்ளது. பல்கலைக்கழத்தின் பெருமளவு மின்சக்தியை சூரிய ஆற்றால் மூலம் பெறுதல், பல்கலைக்கழகத்தின் அறக்கட்டளை நிதியை புவிவெப்படைவதற்கு காரணமாகாத தொழில்களில் மட்டுமே முதலீடு செய்தல் என்பன போன்ற திட்டங்களையும் இந்த பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் உலக திருக்குறள் மாநாடு இந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.