பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி! ட்ரம்ப்-ன் புது பிளான்!
அமெரிக்க பள்ளிகளில் அடிக்கடி நடக்கும் துப்பாக்கிச் சூட்டை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
அமெரிக்காவின், ஃப்ளோரிடாவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டை நடத்தியவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாணவனாவார். இவரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடப்பது குறித்து பெற்றோர்களும், மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி வைத்திருக்க கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்கள் வலுத்து வர, பாதி தானியங்கி துப்பாக்கியை, முழு தானியங்கி துப்பாக்கியாக மாற்ற பயன்படுத்தப்படும் பம்ப் ஸ்டாக்ஸ் என்ற உதிரி பாகத்துக்கு அமெரிக்காவில் தடை விதித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், பள்ளிகளில் துப்பாக்கிச்சூட்டை தடுக்க, பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது குறித்து ட்ரம் பேசும்போது, நீங்கள் துப்பாக்கி வைத்திருக்கும் திறமையான ஆசிரியராக இருந்தால், உங்களால் தாக்குதலை விரைவாக தடுக்க முடியும். பள்ளிகளில் 20 சதவீத ஆசிரியர்கள் துப்பாக்கிச் சூடுதலில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். துப்பாக்கியை திறமையாக கையாளும் நபர்களுக்கு மட்டுமே நான் கூறுவது பொருந்தும் என்று ட்ரம்ப் கூறினார். அவரது கருத்து தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.