பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற தலித் இந்துப் பெண்… நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினரானார்!!
பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக தலித் இனத்தைச் சேர்ந்த இநதுப் பெண் ஒருவர் நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நவாஸ் ஷெரிஃப்பின் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேல்-சபையில் 33 இடங்களுடன் அந்தக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.
சிந்து மாகாணத்தில் 12 இடங்களில் 10 இடங்களை முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்றுள்ளது.
இக்கட்சி சார்பில் சிந்து மாகாணத்தில் இருந்து மேல்-சபைக்கு போட்டியிட்ட இந்து தலித் இனப்பெண் கிருஷ்ண குமாரி கோலி வெற்றி பெற்றார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள முதல் தலித் இன இந்துப்பெண் என்ற பெயரை அவர் பெற்று இருக்கிறார்.
இவருடைய வெற்றி, பெண்களுக்கு மிகப்பெரிய மைல் கல்லாகவும், சிறுபான்மையினர் உரிமைக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பும் இதே கட்சி சார்பில்தான் ரத்னா பகவன்தாஸ் சாவ்லா என்ற பெண், நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்துப் பெண் என்ற பெயரைப் பெற்று இருந்தார்.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமாரி கோலி, தார் பகுதியில் நங்கர்பார்க்கர் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தை சேர்ந்தவர்.. ஒரு ஏழை விவசாய குடும்பத்தின் மகளாக 1979-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் பிறந்தவர் கிருஷ்ணகுமாரி.
இவரும், இவரது குடும்ப உறுப்பினர்களும், 3 ஆண்டுகள் உமர்கோட் மாவட்டத்தில் குன்ரி என்ற இடத்தில் ஏராளமான நிலங்களின் அதிபராக இருந்த ஒருவரின் தனியார் சிறையில் இருக்க நேர்ந்து உள்ளது. இவர் அப்போது 3-வது கிரேடு மாணவியாக இருந்து உள்ளார்.
தனது 16-வது வயதில் 9-ம் கிரேடில் படித்துக்கொண்டிருந்தபோது லால்சந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தனது படிப்பை தொடர்ந்தார். சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனது சகோதரருடன் இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் ஒரு சமூக ஆர்வலராக இணைந்தார். தார் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் பாடுபட்டு பெயர் பெற்றார். இப்போது நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினராக உயர்ந்து உள்ளார். இவரது வெற்றியை அங்கு உள்ள சிறுபான்மை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.