மனித உயிர்களை காவு வாங்கி கோரத்தாண்டவம் ஆடி வரும் கொடூரமான கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகில் இருக்கும் 200 நாடுகளுக்கு பரவி தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா என ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கொரோனா வைரஸ் நிலைகுலைய செய்துள்ளது. இதுவரையில் 785,777 மக்கள் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். 37,815 மக்கள் கொரோனாவிற்கு இரையாகி இருக்கின்றனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமலும் உலக நாடுகள் அதன் பாதிப்பிலிருந்து மீள வழி தெரியாமலும் திணறி வருகின்றன.

இதனிடையே கொரோனா வைரஸின் முடிவுகாலம் நெருங்கி விட்டதாக ஸ்டான்போர்டு பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் கூறியிருக்கிறார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தற்போது உலகம் சந்தித்திருக்கும் நிலைமை இன்னும் சிறப்பானதாக மாறிவிடும் என்றும் கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கிக் கொண்டு இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் சமூக விலகல் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு அவசியமான பெரிய சக்தியை ஒட்டு மொத்த உலகிற்கும் அளித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

COVID-19 pandemic will end soon, says Nobel laureate who predicted ...

அவரது கருத்து உலக நாடுகள் இடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது அது குறித்து துல்லியமான கணிப்புகளை அவர் வெளியிட்டிருந்தார். சீனாவில் 80000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும் என்றும் 3250 உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படியே 81 ஆயிரம் மக்கள் சீனாவில் பாதிக்கப்பட்டு 3305 மக்கள் பலியாகி இருக்கின்றனர் அவர் தெரிவித்த கருத்துக்களின் படி சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.