கம்போடியாவில் பேட்டம்பங்க் மற்றும் பொய்பெட் பகுதிகளுக்குச் சென்றால், ஒரு அதிசயத்தை பார்க்கலாம். ஆமாம், இந்த இரு பகுதிகளுக்கும் இடையே மக்களே ரயில் ஓட்டும் வினோதம் நடக்கிறது! 

கம்போடியா பிரெஞ்சு காலனி நாடாக இருந்த போது 19ம் நூற்றாண்டில் 320 கி.மீ. நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. இந்த ரயில் சேவை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால், இது ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. 36 ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியாவில் உள்நாட்டுக் கலவரம் வெடித்தபோது, பல இடங்களில் ரயில் சேவை கள் நிறுத்தப்பட்டன. இதில் இந்த ரயில் சேவையும் முடங்கியது.

உள்நாட்டுக் கலவரங்களுக்குப் பிறகு ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்த்தார்கள் மக்கள். ஆனால், அது நடக்கவில்லை. ‘பொறுத்தது போதும்’ என பொங்கி எழுந்த மக்கள், தாங்களாகவே அந்தத் தண்டவாளத்தில் ரயிலை இயக்க ஆரம்பித்துவிட்டார்கள்! எப்படி? இதற்காக, பழுதடைந்த ரயில்களின் சக்கர அச்சுகளை மட்டும் எடுத்து, அதன் மேல் மூங்கில் கழிகளை பலகை போல் அமைத்தார்கள். அவ்வளவுதான், (மூங்கில்) ரயில் தயாராகிவிட்டது! அதாவது, நம்ம ஊரில் ரயில் டிராலி பார்த்திருக்கிறீர்களா? அதுபோல!