இந்த விஷயத்துல இந்தியாவை உலக நாடுகள் பின்பற்றணும்..! பில்கேட்ஸ் வலியுறுத்தல்
இந்தியாவில் பின்பற்றப்படும் ஆதார் முறையை உலக நாடுகளும் பின்பற்ற வேண்டும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
இந்திய குடிமகன் என்பதற்கான பொது அடையாளமாக ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது. பிறகு அரசு நலத்திட்ட சேவைகளை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. அதேபோல், வங்கி கணக்குகள், பான் எண் ஆகியவையுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரித்த உச்சநீதிமன்றம், இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. ஆதார் தொடர்பான தீர்ப்பு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் ஆதார் முறை பாதுகாப்பானதாக இல்லை. ஆதார் இணையதளத்தில் உள்ள குறைகளை ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே ஆதார் இணையதள தகவல்களை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவை சேர்ந்த தகவல் பாதுகாப்பு வல்லுநர் கருத்து தெரிவித்திருந்தார்.
இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஆதார் இணையதளத்தை ஹேக் செய்ய முடியாது எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் ஆதார் முறையை உலக நாடுகளும் பின்பற்ற வேண்டும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பில்கேட்ஸ், இந்தியாவில் பின்பற்றப்படும் ஆதார் முறை நல்ல பலன்களை தரக்கூடியது. ஆட்சி முறையின் தரம் உயர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் ஆற்றலும் மேம்படும். இதற்கு ஆதார் உதவும். அந்த வகையில் உலகின் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டிய முக்கியமான திட்டம் ஆதார். இந்த திட்டத்தை உலக நாடுகளுக்கு எடுத்து செல்ல உலக வங்கிக்கு நாங்கள் நிதியுதவி செய்வோம் என பில்கேட்ஸ் தெரிவித்தார்.
மேலும், ஆதார் என்பது பயோமெட்ரிக் முறையிலான சரிபார்ப்புத் திட்டம் மட்டுமே. இதனால் தனிநபர் சுதந்திரத்துக்கு சிக்கல் எதுவும் ஏற்படாது. எந்த மாதிரியான தகவல்கள் சேமிக்கப்படுகின்றன, யார் அந்தத் தகவல்களை அணுகுகிறார்கள் போன்ற விஷயங்களை கவனிக்கவேண்டியது அவசியம். இவை சரியாக கையாளப்படுகின்றனவா என்றும் பார்க்கவேண்டும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.