தண்ணீர் தீரப்போகும் நகரங்களின் பட்டியலில் இந்திய நகரம்!!
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் வரும் ஏப்ரல் 16ல் குடிநீர் முழுவதும் தீர்ந்துபோய் பூஜ்ஜிய நாளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கேப்டவுன் அருகிலுள்ள கிரபவ் நகர விவசாயிகள் அமைப்பு உதவியதால் கேப்டவுனின் பூஜ்ஜிய நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேப்டவுனைப் போன்று விரைவில் தண்ணீர் தீர வாய்ப்புள்ள 11 நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த 11 நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் பெங்களூரு என்பது அதிர்ச்சிக்குரிய தகவல்.
பூமியில் 70 % சதவீதம் நீர் இருந்தாலும், அதில் வெறும் 3% சதவீதம் மட்டுமே தூய்மையானதாக உள்ளது. உலகில் சுமார் ஒரு கோடி மக்கள் போதுமான தண்ணீர் கிடைக்காமல் துன்பத்தில் உள்ளனர். 2030 க்குள் பல நகரங்கள் தண்ணீர் பஞ்சத்துக்கு தள்ளப்படும் என்று ஐநா எச்சரித்துள்ளது. அந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூருவும் உள்ளது.
தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் பெங்களூருவின் அதீத வளர்ச்சியால், நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை நிர்வகிக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். பெங்களூருவில் நிலைமை மோசமாவதைத் தவிர்ப்பதற்கு பழைய குழாய் முறை தேவை என்று அரசு வலியுறுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள 85% தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்பது மற்றுமொரு அதிர்ச்சி தகவல். பெங்களூருவிலுள்ள பெரும்பாலான ஏரிகள் மாசசடைந்துள்ளதால் அதில் உள்ள ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ உகந்ததல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை சமாளிக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசும் மாநகராட்சி நிர்வாகமும் உள்ளது.
இந்த பட்டியலில், பிரேசிலின் சா பாலோ, சீன தலைநகர் பெய்ஜிங், இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா, உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றான எகிப்தின் கெய்ரோ, ரஷ்யாவின் மாஸ்கோ, லண்டன், டோக்கியோ, மெக்ஸிகோ போன்ற உலகளவில் தொழில்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த பட்டியலில் உள்ளது.