அமெரிக்க பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களை காப்பாற்றிய இந்திய ஆசிரியை… குவியும் பாராட்டு…
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவர் ஒருவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியான சோக சம்பவத்தின்போது, தனது வகுப்பறையைப் பூட்டி மாணவர்களை பத்திரமாக பாதுகாத்த இந்திய ஆசிரியை ஒருவரை அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பாராட்டி வருகின்றன.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க்லேண்ட் நகர் மெர்ஜாரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 14-ந்தேதி மதியம் துப்பாக்கியுடன் நுழைந்த முன்னாள் மாணவன் நிகோலஸ் என்பவர், கண்மூடித்தனமாக சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சி அடையச் செய்தது.
அந்தப் பள்ளியில் இந்தியாவை சேர்ந்த சாந்தி விஸ்வநாதன் என்பவர் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது இரண்டாவது முறை எச்சரிக்கை மணி ஒலித்தபோது, ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை புரிந்துகொண்ட ஆசிரியை சாந்தி விஸ்வநாதன், உடனடியாக தனது வகுப்பு அறைக்கதவையும், ஜன்னல்களையும் பூட்டி விட்டார். ஜன்னல் கண்ணாடிகளை பேப்பர் கொண்டு மறைத்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருந்த நிக்கோலஸ் குரூசின் கண்களுக்கு தன் வகுப்பு மாணவ, மாணவிகள் பட்டுவிடக்கூடாது என்பதில் அவர் கண்ணும், கருத்துமாக செயல்பட்ட சாந்தி விஸ்வநாதன் மாணவ, மாணவிகளை தரையில் பதுங்க வைத்தார்.
இதைத் தொடந்து ஸ்வாட்’ என்னும் அதிரடிப்படை போலீசார் வந்து, அந்த வகுப்பு அறை கதவைத் தட்டியபோது, சாந்தி விஸ்வநாதன், பயங்கரவாதிதான் போலீஸ் போல வந்து பேசி கதவைத் தட்டுவதாக கருதினார். முடிந்தால் கதவை உடைத்துப்பாருங்கள் அல்லது சாவி கொண்டு வந்து திறந்து பாருங்கள். நான் கதவைத் திறக்கமாட்டேன் என்று கூறி விட்டார்.
எச்சரிக்கை மணி 2 முறை ஒலித்த உடனேயே விபரீதத்தை புரிந்து, புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு, தனது வகுப்பு மாணவ, மாணவிகளை காப்பாற்றிய ஆசிரியை சாந்தி விஸ்வநாதனை, மாணவ, மாணவிகளின் பெற்றோர் மனம் திறந்து பாராட்டினர்.
மேலும், சன் சென்டினல் உள்ளிட்ட பத்திரிக்கைகளும், சாந்தி விஸ்வநாதன் தொடர்பான செய்தியை வெளியிட்டு பாராட்டு தெரிவித்து வருகின்றன.