நேபாள விமான விபத்தில் 50 பேர் உயிரிழப்பு?
நேபாள தலைநகர் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் வங்கதேச பயணிகள் விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கியதில் 50 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வங்கதேச தலைநகர் டாக்கவில் இருந்து 67 பயணிகள் மற்றும் 4 விமான பணிக்குழுவினர் 71 பேருடன், யு.எஸ். பங்க்ளா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டு வந்தது. அங்கு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது.
விமான ஓடுதளத்தை விமானம் அடையும் முன், ஓடுதள மைதானம் அருகே உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
இதுவரை விமானத்தில் இருந்து 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தொரிகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விமான விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. விமான விபத்து காரணமாக காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. காத்மண்டு திரிபுவன் சர்வதேச நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.