இலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு பின்னணியில் செயல்பட்ட பயங்கரவாதி பயன்படுத்திவந்த லேப் டாப்பை இலங்கை போலீஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஈஸ்டர் அன்று இலங்கை தலைநகர் கொழும்பு சுற்று வட்டாரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் தேசிய ஜவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அதன் தலைவரான முகமது ஜாஹ்ரான் ஹாஷிம் என்பவர்தான் குண்டுவெடிப்பின் காரணமானவர் என்றும் இலங்கை போலீசார் சதேகப்பட்டது. குண்டுவெடிப்பில் ஷாஷிம் கொல்லப்பட்ட நிலையில் சுமார் ஒரு மாதம் கழித்து அவரது லேப்டாப் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்; தேசிய தவ்ஹித் ஜமாத் தலைவர் ஜாஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய லேப்டாப், 35 லட்ச ரூபாய் பணம் ஆகியவை உளவுத்துறையின் தகவலின் பேரில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அந்த அமைப்பின் அம்பாரா பகுதி தலைவர் கல்முனை ஷ்யாம் சில வாரங்களுக்கு முன் இலங்கை போலீஸாரால் கைது செய்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதேபோல, ஜாஹ்ரான் ஹாஷிம் தனது லேப்டாப்பை ஷ்யாமிடம் கொடுத்து மிகவும் பத்திரமாக வைத்திருக்கும்படி கூறியதாகவும், அந்த லேப்டாப் தற்போது அட்டலிசேனா லகூன் பகுதியில் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்தத் தகவல் உடனடியாக உளவுப் பிரிவு மூலம் போலீசாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அப்பகுதியில் நடத்திய சோதனையில் குண்டு வெடிப்புக்கு காரணமான ஹாஷிம்ன் லேப் டாப் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் என்னென்ன விவரங்கள் இருக்கின்றன என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.