இளைஞர் படுகொலை.. உடலை வாங்க மறுத்து போராடும்.. அறிவிக்கப்படாத பந்த் காரணமாக மயிலாடுதுறையில் மக்கள் அவதி!

Mayiladuthurai Young Man Murder : மயிலாடுதுறையில் இளைஞர் ஒருவர் படுகொலை சம்பவத்தில் அவரது உடலை வாங்க மறுத்து 12 மணி நேரம் தாண்டியும் போராட்டம் தொடர்கிறது.

First Published Mar 21, 2024, 10:11 PM IST | Last Updated Mar 21, 2024, 10:11 PM IST

மயிலாடுதுறையில் நேற்று இரவு பெருமாள் கோயில் தெற்கு வீதியில் கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் உடன் வந்த உறவினர் சரவணன் என்பவர் வெட்டு காயங்களுடன் தப்பி ஓடி உயிர் தப்பினார். மயிலாடுதுறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் கண்ணன் படுகொலையில் குற்றவாளியாக அஜித் குமார் சேர்க்கப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் காலை 7:00 மணி முதல் இறந்த அஜித் குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மயிலாடுதுறை, கும்பகோணம் சாலையில் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜாதி மோதல் ஏற்படாமல் தடுக்க நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு மயிலாடுதுறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கையில் சுமைகள் மற்றும் குழந்தைகள் உடன் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அறிவிக்கப்படாத பந்த காரணமாக மயிலாடுதுறை கடைவீதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. 

தேர்தல் நேரம் என்பதால் போராட்டத்தை ஒடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்து வருவதாகவும், தமிழக அரசு மென்மையான போக்கை கையாண்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Video Top Stories