Madurai : ATMல் பணம் எடுத்து தரேன்.. ஏமாற்றி பணம் திருடிய பெண்.. போலீசாரிடமிருந்து தப்பி ஓட்டம் - சிக்கினாரா?

Madurai : மதுரை அண்ணா நகரில் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக கவனத்தை திசை திருப்பி 53,000 ரூபாயை ஒரு பெண் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத்தியது.

First Published May 19, 2024, 11:57 PM IST | Last Updated May 19, 2024, 11:57 PM IST

மதுரை அடுத்த கருப்பாயூரணி கணேஷ் நகரை சேர்ந்தவர் பூங்கொடி. 50வயது பெண்ணான இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள  எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-மில் 20ஆயிரம் ரூபாய் பணம் எடுக்க முயன்றுள்ளார். அவருக்கு பணம் வராத நிலையில், அவருக்கு பின்னால் நின்ற இளம்பெண் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாக கூறி முயற்சி செய்துள்ளார்.

அதன்பிறகும் பணம் வரவில்லை என்று ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறை வாகிவிட்டார். பின்னர் பூங்கொடியின் அக்கவுண்டில் இருந்து 53,000 வரை எடுக்கப்பட்டது குறித்து பூங்கொடியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததும் அதிர்ச்சியடைந்த அவர், அண்ணா நகர் காவல்நிலையத்தில்  புகார் செய்தார். 

வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மோசடியில் ஈடுப்பட்ட இளம்பெண், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி, மன்னர் நாயக்கர் தெருவை சேர்ந்த ராஜசேகர் மனைவி மணிமேகலை என தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். 

மேலும் அவரை மதுரை சிறையில் ரிமாண்ட் செய்வதற்காக அழைத்துச்செல்லப்பட்டபோது, பெண் கைதி மணிமேகலை ஆடை மாற்றி வருவதாக கூறி, உடைமாற்றும் அறைக்கு சென்று அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில், திருமங்கலத்தில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர். தப்பி ஓடிய 2 மணி நேரத்தில் இளம்பெண் மணிமேகலையை கைது செய்த தனிப்படை போலீசாரை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.

ஏற்கனவே இது போல ஏடிஎம்-மில் பணம் எடுத்து தருவதாக பல இடங்களில் மோசடி செய்து இவர்‌ மீது மதுரை, தேனி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 17 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.