மழை வேண்டி கழுதைகளுக்கு லிப்ஸ்டிக் பூசி, வளையல் அணிவித்து திருமணம்... அட்சதை தூவி வாழ்த்திய கிராம மக்கள்

 மழை வேண்டி கிராம மக்கள் இணைந்து  கழுதைகளுக்கு  அலங்காரம் செய்து மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையுடன் விமர்சியாக திருமணம்  நடத்தி வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

First Published May 5, 2024, 1:50 PM IST | Last Updated May 5, 2024, 2:53 PM IST

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் வறட்சியால் தவிக்கிறது.  குறிப்பாக, கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் மழை இல்லாமல் நுாற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. மானாவாரி பயிர் செய்வது குறைந்து விட்டது. ஆடு, மாடுகளுக்கு தீவனம் இல்லாததால் இறந்து வருகிறது. மேலும் கால்நடைகளை விற்று வருகின்றனர். இந்நிலையில், அக்கரை செங்கப்பள்ளி, லக்கேபாளையம், எல்.கோவில்பாளையம் ஆகிய கிராம மக்கள் ஒன்றுகூடி ஊர் கூட்டம் நடத்தினர். அதில் மழை வேண்டி கழுதைகளுக்கு பஞ்ச கல்யாணி திருமணம் நடத்தி வைக்க முடிவெடுத்தனர். 

லக்கேபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன. பெண் கழுதைக்கு புடவை கட்டி வளையல், பாசி அணிவித்து உதட்டுச் சாயம்,நெகச்சாயம் பூசி மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல ஆண் கழுதைக்கு வேஷ்டி அணிவித்து மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க கிராம மக்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் பெண் கழுதைக்கு தாலி அணிவித்து  திருமணம் விமரிசையாக நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள் கழுதைகளுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர். 

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மொய்ப்பணம் கொடுத்து சென்றனர். மேலும் திருமண விருந்தாக கிராம மக்களுக்கு கம்மங்கூழ் வழங்கப்பட்டது. மனிதர்களுக்கு திருமணம் நடைபெறுவது போலவே மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

Video Top Stories