பலூனுக்கு காற்றடைக்கும் போது விபரீதம் ஒருவர் பலி; பதறவைக்கும் காட்சி
திருச்சியில் பலூனுக்கு காற்று நிரப்ப பயன்படுத்தப்படும் ஹீலியம் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், 13 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மெயின்கார்டு அருகே மேலபுலிவார்டு சாலையில் ஏராளமான துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும். இந்நிலையில் நேற்று இரவு இந்த சாலையில் ஹீலியம் பலூன்கள் விற்பனை செய்யப்பட்டன. அப்போது பலூனுக்கு காற்று அடைக்கும் போது திடீரென ஹீலியம் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் மிகவும் அச்சமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலூன் வாங்க வந்த 13 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலூன் வியாபாரி தப்பி ஓடிய நிலையில், அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அனுமதியின்றி ஹீலியம் சிலிண்டர்களை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.