தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்..? வானிலை மையம் தகவல்..

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

First Published Oct 21, 2023, 3:48 PM IST | Last Updated Oct 21, 2023, 3:48 PM IST

தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டி தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுவடைந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் இன்று காலை புயலாக வலுவடைந்தது. தேஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25-ம் தேதி ஓமன் மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் 25-ம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளுக்கும் 26-ம் தேதி வரை வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் “ கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அடுத்த 3 நாட்களை பொறுத்தவரை தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்..” என்று தெரிவித்தார்.

Video Top Stories