கோத்தகிரி அருகே இரு குட்டிகளை முதுகில் சுமந்து வந்த கரடி!
நீலகிரி மாவடம், கோத்தகிரி அருகே இரு குட்டிகளை முதுகில் சுமந்தவாறு சாலையில் நடந்து வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கன்னிகா தேவி குடியிருப்பு பகுதி தேயிலை தோட்டத்தில் சில பெண்கள் தேயிலையை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இரு குட்டிகளை தனது முதுகில் சுமந்தவாறு தாய் கரடி ஒன்று சாலையில் நடந்து வந்தது. சிறிது தூரம் சாலையில் நடந்து வந்த அந்த கரடி அங்குமிங்கும் பார்த்தது. அப்போது தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்வதை பார்த்த அந்த கரடி ,தனது குட்டிகளுடன் பாதுகாப்பாக தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் நாவல் பழம் சீசன் துவங்க இருப்பதால் கரடிகள் நாவல் பழங்களைத் தேடி கிராம பகுதிக்குள் நடமாடி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவ்வாறு வரும் கரடிகளை யாரும் அச்சுறுத்தக் கூடாது என வனத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.