Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகள் போராட்டம்.. பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர் மது போதையில் மயக்கம் - கடுப்பாகி கொந்தளித்த விவசாயிகள்!

Farmers Protest : டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ரயில் மறியலில் ஈடுபட விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

எம்.எஸ்., சுவாமிநாதன்குழு பரிந்துரை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள், விவசாய கடன் முழுமையும்  தள்ளுபடி செய்வது உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என டில்லியில் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மாநில தலைவர் பழனியப்பன் தலைமையில் பாபநாசம் ரயில் நிலையத்தில் மறியல் செய்ய சென்ற விவசாயிகளை காவல்துறை ரயில் நிலையம் அருகே நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். 

அப்போது சிறை வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மூன்று பேர் மது குடித்து விட்டு போதையில் இருந்துள்ளனர். அதில் ஒரு காவலர் நிதானம் இழந்து அங்கிருந்த மணமக்கள் அறையில் போதை தலைக்கேறி சீருடையுடன் தரையில் படுத்துள்ளார். 

இதனை அறிந்த விவசாயிகள் அதனை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். மேலும் கைது செய்த விவசாயிகளுக்கு குடிக்க தண்ணீர், உணவு எதுவும் ஏற்பாடு செய்து தரவில்லை. ஆனால் காவலர்கள் மட்டும் குடித்துவிட்டு மதுபோதையில் உள்ளனர் எனக் கூறி காவலர்களை கண்டித்து திருமண மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள்.

Video Top Stories