Watch : குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி! சாரல் மழையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க சிறிது நேரம் தடைவிதிக்கப்பட்டு பின்னர் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி, கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்று காலை வரை கருப்பாநதி பகுதியில் 27 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 22 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இதேபோல் கடனாவில் 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது. குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய 2 அருவிகளிலும் கலையில் சற்று மழை பெய்ததன் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க சிறிதுநேரம் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தண்ணீர் குறைந்த்தைத் தொடர்ந்து பத்து பத்து பேராக குளிக்க அனுமதிக்கின்றனர். பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் தடை விதிக்கப்படவில்லை. இதனால் அந்த அருவிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.