Asianet News TamilAsianet News Tamil

மரணத்திலும் கணவனை பிரியாத மனைவி., ஒரே பல்லக்கில் இருவருக்கும் இறுதி ஊர்வலம் - மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சோகம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

First Published Sep 24, 2022, 8:04 PM IST | Last Updated Sep 24, 2022, 8:04 PM IST

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருதன் (வயது 85). இவரது மனைவி ஆண்டிச்சி (வயது 75). இவர்களுக்கு மூன்று ஆண் மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் தனது மகன்கள் உடன் மருதன் மற்றும் அவரது மனைவி ஆண்டிச்சி ஆகியோர் வசித்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களாக மருதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. 

இதில் அவர் நேற்று உயிரிழந்தார். கணவரின் இறப்பில் மனைவி ஆண்டிச்சி அதிர்ச்சியிலேயே இருந்துள்ளார். கணவர் உடலுக்கு அருகே அமர்ந்து அழுதபடி இருந்தவர் திடீரென கணவர் மருதனின் உடலுக்கு அருகே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை பரிசோதித்து பார்த்ததில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து ஆண்டிச்சியின் உடலும் அவரது கணவர் மருதனின் உடலுக்கு அருகில் வைக்கப்பட்டது. மேலும்,  கணவன் உயிரிழந்த துக்கம் தாங்கமுடியாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே மட்டும் இல்லாது அப்பகுதி மக்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ஒரே ஊர்தியில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

Video Top Stories