அரசு பேருந்தில் சென்ற சாம்சங் ஊழியர்களை தேடி, தேடி பிடித்த போலீஸ்.! வைரலாகும் வீடியோ

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், போராட்டம் தொடர்கிறது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட சென்ற ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

First Published Oct 9, 2024, 2:44 PM IST | Last Updated Oct 9, 2024, 2:44 PM IST

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

சாம்சங் நிறுவனம். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இதனையடுத்து தமிழக அரசு சார்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்த போதும் ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த சாம்சங் நிறுவனம் ஊழியர்களை பனி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தது. இறுதியாக நேற்று முன் தினம் தொழிற்சங்கம், சாம்சங் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியது.

5ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை

இதில் ஒரு இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,000/- வழங்கப்படும். இது அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை நடைமுறையில் இருக்கும். 6 பணியில் இருக்கும் தொழிலாளர் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்தினரின் உடனடித் தேவைக்காக, ரூ.1,00,000  கூடுதல் உதவித் தொகையாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இருந்த போதும் தொழிற்சங்கம் அங்கீகாரம் தொடர்பாக எந்தவித  முடிவும் அறிவிக்காத தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சாம்சங் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். எந்தவித அசம்பாவித சம்பவங்களை நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கையாக ஊழியர்கள் தடுக்கப்பட்டனர். அப்போது அரசு பேருந்தில் போராட்டத்திற்கு சென்ற சாம்சங் ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.