Asianet News TamilAsianet News Tamil

ஓட்டுநர், நடத்துநருக்கு மிரட்டல் விடுத்து சாகச பயணம்; அச்சத்தின் உச்சத்தில் பேருந்து ஓட்டுநர்கள்

பேருந்தில் தொங்கிக்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவர்களை மேலே வரச்சொன்னால் மாணவர்கள் மிரட்டுவதாக நடத்துநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் அதிக அளவில் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, அணைக்கட்டு, கே வி குப்பம், பேரணாம்பட்டு, பரதராமி, சைனகுண்டா ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.

சில சமயங்களில் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி குறைவாக உள்ளதால் மாணவர்கள் அவ்வப்போது ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டில் தொங்கிய படியே வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி நிர்வாகம் பலமுறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிய படியே பயணம் செய்து வருகின்றனர்.

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும் மாணவர்களிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் பேருந்துகளை நடுவழியில் நிறுத்தியும் மாணவர்களை எச்சரித்து உள்ளனர். சில நேரங்களில் மாணவர்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை மிரட்டும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநரும் நடத்துநர்களும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் போது மாணவர்களிடம் பேசுவதற்கு தற்போது அச்சப்படுவதாக கூறப்படுகிறது. எனவே பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Video Top Stories