பாதியில் நிறுத்தப்பட்ட படிப்பு; மாணவர்களை வீட்டிற்கே தேடி சென்று அழைத்து வந்த மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவர்களை வீடு தேடி சென்று தனது காரிலேயே  அழைத்து வந்து பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர்.

First Published Nov 8, 2023, 6:20 PM IST | Last Updated Nov 8, 2023, 6:20 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் 31 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருப்பதை  அறிந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித் துறையினருடன் அவர்களது வீட்டிற்கு சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்து மாணவர்களை மாவட்ட ஆட்சியரின் காரிலேயே அழைத்து வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தல் காரணமாக வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் மாவட்ட கல்வி நிர்வாகத்தின் சார்பாக நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களுடைய குறைகளை கேட்டு அறிந்து அதில் நிவர்த்தி செய்து மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு சென்று படிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.