அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஆய்வு செய்து ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்
ராணிபேட்டை அரசு ஆரம்பப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் வளர்மதி வாசிப்பு, கற்றல் திறனில் பின் தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துமாறு ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அரசு பள்ளிகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முறையான கட்டுப்பாடுகள் இல்லை, கற்பிக்கும் திறனில் முன்னேற்றம் இல்லை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. இதற்கு நேர் மாறாக தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி காவேரிப்பாக்கம் மற்றும் புதுப்பட்டு ஊராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளின் பாட புத்தகங்கள் வாசித்தல் திறன், நினைவாற்றல் திறன், ஆங்கில மொழி பேசுதல் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடல் செய்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி அறிவுரைகளை கூறினார்.
மேலும் பள்ளிகளில் கல்வி கற்றலில் பின் தங்கி இருக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி கற்கும் திறனை அதிகரிக்கும் விதமாக ஆசிரியர்கள் திறன் பட செயல்பட வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரிக்கை செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட அரசு அதிகாரிகள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.