பெண் காவலரை ஆபாசமாக பேசி தாக்கிய நான்கு பேர் கைது - சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பெண் காவலரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்ற 4 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நரியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கீதா என்பவர் குடியாத்தம் மதுவிலக்கு காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அழிஞ்சு குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் துணி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மது போதையில் துணி கடைக்கு வந்த மேல்கொத்தகுப்பம் பகுதியை சேர்ந்த குணசேகரன், சத்தியமூர்த்தி, பிரபாகரன், தினகரன், ஆகிய நான்கு பேரும் மகளிர் காவலரை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
பின்னர் காவலர் கீதா அவர்கள் ஆபாசமாக பேசுவதை செல்போனில் வீடியோ எடுக்க முயன்று உள்ளார். அப்போது அதனை பார்த்த நான்கு பேரும் காவலர் கீதா கையில் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது கடைக்காரர் மது போதையில் இருந்த நான்கு பேரிடம் கை எடுத்து கும்பிட்டு பிரச்சினை செய்ய வேண்டாம் என கேட்டுள்ளார். அதனையும் பொறுபடுத்தாமல் நான்கு பேரும் காவலர் கீதாவை ஆபாசமாக பேசி தாக்கவும் முயன்றுள்ளனர்.
பின்னர் காவலர் கீதா மேல் பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினரை கண்டதும் ரகளையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். மேல்பட்டி காவல் நிலையத்தில் மகளிர் காவலர் கீதா அளித்த புகாரின் பேரில் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 4 பேரை மேல் பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். துணிக்கடையில் மகளிர் காவலரிடம் மது போதையில் நான்கு பேர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.