எங்களுக்கு அந்த டீச்சர் தான் வேணும்; பணி மாறுதல் பெற்ற ஆசிரியைக்காக மாணவர்கள், பெற்றோர் போராட்டம்
திருச்சி அருகே பணி மாறுதலில் சென்ற ஆசிரியையை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி பள்ளியை புறக்கணித்து மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம் துளையாநத்தத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. 26 மாணவர்கள், 27 மாணவிகள் என மொத்தமாக 53 பேர் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் கமலம், ஆசிரியை தேவதா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி சரியாகப் பணிக்கு வராமல் அதிகம் விடுமுறை எடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 60 மாணவர்கள் இருந்தால் மூன்று ஆசிரியர்கள் அதற்கு குறைவான மாணவர்கள் இருந்தால் இரண்டு ஆசிரியர்கள் என்ற கணக்கில் இப்பள்ளியில் பணிபுரிந்த சுபஸ்ரீ ஆசிரியை பணி மாறுதலில் சென்றுள்ளார்.
இதன் காரணமாக மாணவர்கள் சரியாக படிக்க முடிவதில்லை என ஊர் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இன்று பள்ளியை புறக்கணித்து பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் ஆனந்தராஜ் மற்றும் ஜெம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளர் தண்டபாணி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.